கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த அவரது ஏராளமான தனிப்பட்ட உடமைகள் நாசமாயின என்று அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதா விஜயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவரது ராமவரம் தோட்ட வீட்டுக்கு சென்றிருந்த பிபிசி தமிழோசையின் செய்தியாளர், அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகியுள்ளதையும், அவர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டுக்கு பின்னாலிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை முற்றும் சேதமடைந்துள்ளதையும் கண்டதாகக் கூறுகிறார்.
இந்த ராமாவரம் வீட்டில்தான் நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜிஆர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த அறையில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய மேசை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகியுள்ளது.
வீட்டின் முகப்புக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகிக் கிடப்பதையும் காண முடிகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டிற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகிவிட்டன.
எனினும் இந்த வீட்டிற்குப் பின்னால் இருந்த காது கேளாதோர் பள்ளியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் சுதா விஜயன் தெரிவித்தார்
எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட விழாக்களின் பல வீடியோ பதிவுகளும் இந்தவெள்ளத்தில் சேதமடைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா துவங்குவதால் அதற்குள் ராமாவரம் வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் சுதா விஜயம் கூறுகிறார்.
எம்.ஜி.ஆரின் பல முக்கிய நினைவுப் பொருட்கள், சென்னை நகரிலுள்ள அவரது அதிகாரபூர்வமான மற்றொரு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளன.
எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் சமாதி, எம்.ஜி.ஆர், அவரது தாயார் சத்யபாமா ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் ஆகியவையும் இந்தத் தோட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.
No comments
Post a Comment