யாழில் வைத்து "ஒரே நேரத்தில் இரண்டு
இலக்கை தாக்கிய "பெண் கரும்புலி ...!!
ஈழத்து துரோணர்..!!
தமிழர் போராட்ட வரலாற்றில், சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையின் தாக்கம் இல்லாது எந்த பதிவையும் எழுதமுடியாத நிலை உள்ளது. ஏனெனில் அதன் தாக்கம் தமிழர் வாழ்வியலில், வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தை தமிழர் நெஞ்சில் விதைத்து விட்டிருந்தது.
அந்த வரலாற்று இடப்பெயர்வின் வடு, தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் அழியப் போவதில்லை. எல்லோரும் எனது நாட்டு மக்கள் என்னும் பசப்பு வார்த்தைகளை சர்வதேசத்துக்கும், தமிழருக்கும் கூறிக்கொண்டு வெண்புறா வேடமிட்டு ஆட்சிக்கு வந்தார் சந்திரிக்கா.
வந்ததும், அரச பயங்கரவாதத்தை ஏவி, நாகர்கோவில் சிறுவர் பாடசாலை மீது விமானத்தாக்குதல் மூலம் அறுபதற்கு மேட்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவித்தார். அடுத்ததாக நாவாலி தேவாலையத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் 200க்கு மேற்பட்ட மக்களை, விமானத் தாக்குதல் மூலம் சதைக்குவியல்களாக அள்ளியெடுக்க வைத்திருந்தார். இப்படி தமிழர் மீது அவர் விதைத்த துன்பப்பட்டியல் மிக நீளமானது.
அதன் தொடர்ச்சியாக, யாழ் மக்களை பெரும் குண்டுமழையின் மூலம், யாழை விட்டே துரத்தி இருந்தார். 1996ம் ஆண்டு நான்காம் மாதம் 21ம் திகதி, புலிகள் கட்டம், கட்டமாக வன்னிக்கு பின்வாங்கிச் செல்ல, தனது கவசப்படைப்பிரிவை களத்தில் இறக்கி, மக்களில் ஒரே போக்குவரத்து பாதையான கிளாலி நீரேரியை எதிரி ஆக்கிரமித்திருந்தான்.
அன்றைய நாளை எதிரி கொண்டாடினான். முத்தவெளியில், சந்திரிக்காவின் மாமனும் பாதுகாப்பு அமைச்சருமான ரத்வத்தை சிங்கக்கொடியை ஏற்றி தமது இராணுவவெற்றியை கொண்டாடினர்.
ஆனால், புலிகளை வன்னிக்கு துரத்தி விட்டதாக சிங்களம் கனவில் மூழ்கி இருக்கும் போது, விசேட பயிற்சி பெற்ற ஆண்,பெண் போராளிகள் ஊரியான் பாதை ஊடாக யாழின் வடமராச்சி கிழக்கில், உள் நுழைந்தனர்.
மரபுவழி இராணுவமாக பின் வாங்கிய புலிகள், கெரில்லா போராளிகளாக மீண்டும் உள்நுழைந்தனர். இராணுவத்தின் நின்மதியான உறக்கத்தை இந்த புலிகள் இல்லாது செய்திருந்தனர். இதே நேரம் இந்த போராளிகளுக்கும் தெரியாது, இதே போல ஆண், பெண் புலனாய்வுப் போராளிகளும், சில கரும்புலிப் போராளிகளும் உள் நுழைந்தனர்.
இந்த பெண் கரும்புலிப் போராளிகளை விடுதலைப்புலிகளின், மகளீர் புலனாய்வுத் தளபதி கேணல் மணிமேகலை அவர்கள் வழிநடத்தினார். ஒரு இலக்கை அழிக்கும் நோக்கில், பெண் கரும்புலி ஒருவர் அனுப்பப்பட்டிருந்தார். அவரை மிகவும் சாதுரியமான, அடையாளப் பதிவுகள் மூலம் மறைப்பினூடே, அந்த பெண் கரும்புலி பாதுகாக்கப் பட்டார். அவரும் சாதாரண மக்கள் போல யாழில் உலாவித்திரிந்தார்.
அந்த நேரத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பிரச்சார நோக்கத்திலான யாழ் பயணம் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அவர் யாழ் வரும் போதெல்லாம் அப்போதைய யாழ்ப்பாணத்தின் 512 Brigade இராணுவத்தளபதியும் அவருடன் சேர்ந்து பயணிப்பதும், தமிழர் பிரதிநிதிகள் என்று, யாழில் இருந்த தமிழர்களையும் சந்தித்து " இருவரும், தமிழரின் மண்டையை கழுவிக்கொண்டிருந்தனர்.
இதனால் இவர்கள் இருவரும் ஆண்,பெண் புலிகளால் இலக்கு வைக்கப் பட்டனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கத்தின் கட்டிட திறப்புவிழா ஒன்றுக்கான வருகையை அறிந்த பின்னர், சில புலனாய்வுத்தகவல்கள் ஊடாக, அவரது அன்றைய செயல்பாட்டு விபரங்களும் புலிகளால் திரட்டப்பட்டிருந்தது.
அதன்படி 02/07/1996 அன்று பாலாலி இராணுவத்தளத்துக்கு வந்து, அங்கிருந்து அச்சுவேலி கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்கு, பின்னால் அமைந்திருந்த யாழ்மாவட்ட கட்டளைப்பீடத்திற்கு இராணுவப்பாதுகாப்புடன் வந்திருந்தார்.
அங்கு மேஜர்.ஜெனரல்.ஜனகபெறேராவுடன் ஒரு சந்திப்பின் பின்னர். பகல் 12மணிபோல் அதே வாகனரோந்தில் யாழ் நோக்கி பயணமானார். இவர் புத்தூர் சந்தியை தாண்டும் போது, இவர்களது வரவுக்காக 10kg நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை மரத்தில் கட்டிவிட்டு, இன்னொரு அணியான ஆண் போராளிகள் காத்திருந்தனர்.
இவர்கள் தொடரணி கிளைமோரை நெருங்கிய போது, இவர்களால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. ஆனால், டிக்னேற்றர் (பிரதான வெடிமருந்தை வெடிக்க வைக்கும், ஊக்கி மருந்து) வெடித்தது, கிளைமோர் குண்டு வெடிக்கவில்லை.!
அந்த போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் குடிகொண்டது. பின் அந்த குண்டை ஆராய்ந்த போது, அதை பாதுகாத்து வைத்திருந்த இடத்தில், அந்த குண்டின் "கோடெக்ஸ் வயர்" தண்ணீரில் நனைந்திருந்தமையால் தான், வெடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இரவில் அந்த குண்டை பொருத்தியமையால், அந்த போராளிகள் அதைக் கவனிக்கவில்லை.
ஆனாலும், இவர்கள் வரவுக்காக பெண் புலிகளும் காத்திருந்தனர். ஆம், அந்த நாளும் வந்தது. 04/07/1996 அன்று காலையே அந்த பெண் கரும்புலி ஆயத்தமானாள். அன்று அமைச்சரும்,இராணுவத்தளபதியும், யாழ்பாணம் ஸ்டான்லி வீதியில், தனது பரிவாளங்கள் சகிதம் புது கட்டிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த பெண் போராளியின் இலக்கு. அமைச்சரும், மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொடவுமே. பெண் போராளிகள், ஆண்போராளிகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரே நேரத்தில் இரண்டு இலக்கை தெரிவு செய்திருந்தார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பெண்கள் புலனாய்வுத்தளபதி கேணல்.மணிமேகலையின் நேரடி வழிநடத்தலில், அந்த பெண்கரும்புலி சுயமாகவே அந்த தாக்குதலுக்கு தயாராகி விட்டிருந்தாள். இந்த நாளுக்காக பலநாட்கள் அவள் காத்திருந்தாள்.
ஆம், இதோ இலக்கு நெருங்கி விட்டது. பெண்புலி நின்ற இடத்தை இவர்கள் நெருங்கும் போது பெரும் ஓசையுடன் குண்டு வெடித்தது. அந்த தாக்குதலில் நிமல் சிறிபால டி சில்வா காயங்களுடன் தப்பினார். ஆனால் முக்கிய இலக்கான மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொட அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.
இந்த சாதனையை செய்த அந்த பெண் கரும்புலி, தான் பிறந்த மண்ணிலேயே காற்றோடு, காற்றாக கலந்து விட்டிருந்தால். அன்று சிங்களம் அதிர்ந்து போனது. அந்த தாக்குதலின் மூலம், யாழில் இருந்து புலிகளை துரத்திவிட்டதாக,சர்வதேசத்தை நம்பவைத்திருந்த, சிங்களத்தின் பொய் முகமூடியும் சிதைந்து போனது..!
நினைவுகளுடன் துரோணர்...!!!
No comments
Post a Comment