Latest News

December 22, 2015

கோட்டாவைக் காட்டிக் கொடுத்தால் உடன் விடுதலை
by admin - 0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகச் வாக்குமூலமளிக்க, படைவீரர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களைப் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த போதே அவர், இக்கருத்தைத் தெரிவித்தார்.

‘கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸில்

வாக்குமூலமளிக்க, இந்த இராணுவ வீரர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளையும் குற்றவியல் விசாரணைப் பிரிவையும் பயன்படுத்தி, இந்த அரசாங்கத்திலுள்ள பலமிக்க அரசியல்வாதிகள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதை நாம் அறிந்தோம். இந்தச் சம்பவம் உள்ளடங்கலாக, இராணுவ வீரர்கள், கலைஞர்கள், தொழில் நிபுணர்களைக் கைது செய்தமையும் விசாரணைக்குட்படுத்தியமையும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டது’ என அவர் தெரிவித்தார்.

அத்தோடு, கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்தால், உடனடியாக விடுதலை கிடைக்குமென, இவர்களில் ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தான் ஆட்சியில் இருக்கும் போது, எக்னெலிகொட விவகாரம் தொடர்பாக விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், ஆதாரங்களின்றிக் கைதுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments