சச்சின் டெண்டுல்கர் தமது குடும்பத்தினருக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டதாகவும் அவரது பொதிகளைத் தவறாக வேறு இடத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் பிரிட்டிஷ் எயார்வேஸ் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பிரிட்டிஷ் எயார்வேஷ் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெறும் All Stars கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், பிரிட்டிஷ் எயார்வேஸில் அவர் எதிர்கொண்ட நெருக்கடி நிலை பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், “எனது குடும்ப உறுப்பினர்களின் Waiting List டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. இருக்கைகள் இருந்தும் பயணம் உறுதி செய்யப்படவில்லை என்பது குறித்து கடும் கோபமும், விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். மேலும், பயணப் பொதிகளும் தவறான இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது அக்கறையின்மையையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது ட்விட்டர் பதிவுக்கு சில நிமிடங்கள் கழித்து பிரிட்டிஷ் எயார்வேஸ் பதில் அளிக்கையில், ‘மன்னிக்க வேண்டும் சச்சின், உங்களது பயணப்பொதி விபரங்கள், உங்களது முழுப் பெயர், முகவரியை அனுப்பினீர்கள் என்றால் நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்’ என்று கூறியுள்ளது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவி வருகிறது.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா, சச்சின் ரசிகராக தனது ட்விட்டரில், “டியர் பிரிட்டிஷ் எயார்வேஸ், சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், இந்தியா என்ற பெயரை முயற்சி செய்து பாருங்கள், இங்கு தபால் சேவை, கூரியர் நிறுவனங்களுக்கு இந்தத் தகவல் போதுமானது” என்று சற்றே நையாண்டித் தொனியுடன் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment