இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக பொலிஸார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீலால் தந்தெனிய தெரிவித்தார்.
நடராஜா ரவிராஜ் கொலை சம்பந்தமாக சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆனால், 6 சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஹெட்டியாரச்சிகே சந்தன குமார, காமினி செனவிரத்ன ,பிரதீப் சந்தன ஆகிய 3 கடற்படை உறுப்பினர்களுக்கும் பெமியன் ஹுசேன் என்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு சந்தேகநபர்கள் 'தலைமறைவு'
இவர்களைத் தவிர, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகிய இருவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நபர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்றிருந்த கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்ற இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் விடுதலை செய்வது குறித்து சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாத சந்தேகநபர்களுள் ரவிராஜ் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட கடற்படை அதிகாரியும் ஒருவரும் உள்ளார்.
சம்பத் முனசிங்க என்ற இந்த கடற்படை அதிகாரி முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2006-ம் ஆண்டு நவம்பர் 10-ம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக காவல்துறையினர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment