வவுனியா வடக்கில் நெடுங்கேணியில் இருந்து ஒலுமடு ஊடாக மருதோடை நோக்கிச்செல்கின்ற வீதியானது கற்குளம் சந்தியில் இருந்து வெடிவைத்த கல்லு வரை மிகவும் மோசமாகப் பழுதடைந்துள்ளது .
இப்பகுதியில் வசிக்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பாதையூடாகவே நெடுங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு போன்றவற்றுக்கு பயணம் செய்கிறார்கள் ஆனால் அந்தப் பாதை மோசமாகியுள்ளதால் காலையும் மாலையும் ஒருமுறை ஓடுகின்ற வவுனியா வடக்கு பலநோக்குக்கூட்டுறவுச்சங்க பேருந்துகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றன.
இதனால் இப்பேருந்தில் செல்லும் மாணவர்கள் காலம் தாமதித்தே பாடசாலை செல்கிறார்கள்.
கற்குளச்சந்தி தாண்டி மருதோடை நோக்கிச்செல்லும்போது வீதியில் உள்ள ஒரு பாலம் மோசமாக சேதமடைந்தது உடைந்துள்ளதால் மழைகாலத்தில் பாலம் எது ஆறு எது என்று இனம் காணமுடியாத அளவு நீர் பாய்கின்றது.
நீர் தொடர்ச்சியாக பாய்ந்தால் மூன்று கிராமங்களின் போக்குவரத்து மார்க்கம் முற்றாக துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.இப்பிரதேசத்தில் மக்கள் குடியேறி ஆறுவருடங்களாகியும் இங்கு சீரான மின்சார வசதி இல்லை மருத்துவ வசதி இல்லை பாம்பு கடியோ மகப்பேறோ திடீர் வருத்தங்களோ என்றால் மோசமான பாதையில் துவிச்சக்கர வண்டியில் அல்லது மோட்டார் வண்டியில் நீண்ட தூரம் பயணம் செய்து நெடுங்கேணி வைத்திய சாலைக்கு வரவேண்டும் அதற்குள் சில உயிர்கள் பறிக்கப்பட்டுவிடும்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனம் இப்பிரதேசத்திற்குத்திரும்புமா?
வீதி திருத்தப்பட்டாலே இப்பிரதேச அடிப்படை தேவைகள் நிறைவு பெறும் எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
No comments
Post a Comment