Latest News

November 23, 2015

வெடிச் சத்தத்திற்கு குறைவில்லாத பிரதேசமாக இருந்தது முகமாலை- வடக்கு முதல்வர்
by Unknown - 0

எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள், கண்ணி வெடிகள் என வெடிச் சத்தத்திற்கு குறைவே இல்லாத ஒரு பிரதேசமாக இருந்தது முகமாலை என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

முகமாலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் முழு உரை பின்வருமாறு,

இவ்விடத்திற்கு மிக அண்மையிலுள்ள முகமாலைப் பிரதேசத்திலே தான் எமது கௌரவ உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் அவர்கள் பிறந்து வளர்ந்ததாகக் கேள்விப்பட்டேன்.

அத்துடன் பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று அதன்பின் ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாக கடமையாற்றியதுடன் இவ்வழியேதான் தினமும் அவர் சைக்கிளில் சென்று வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் இன்று வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கொழும்பு சென்றுவிட்டார். எனினும் அவரின் தந்தையாரின் பெயர் கொண்ட திரு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண சபை உறுப்பினர் அவர்கள் இன்று இங்கு வந்துள்ளார்.

இந்த முகமாலைப் பிரதேசம் எவ்வளவு பெரிய அழிவுகளை எதிர் கொண்டது என்பதனை நான் நன்கு அறிவேன். 

யுத்த காலத்தில் இப்பகுதி போர்த்தள முனையாக காணப்பட்ட பிரதேசம் ஆகும். எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள், கண்ணி வெடிகள் என வெடிச் சத்தத்திற்கு குறைவே இல்லாத ஒரு பிரதேசமாக இருந்தது. 

அது மட்டுமல்லாமல் இங்கே காணப்பட்ட பெரிய தென்னந்தோப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு செல்வச் செழிப்புடன் விளங்கிய பிரதேசம் வெறுங் கட்டாந் தரையாக மாற்றப்பட்டது.

மக்கள் சாரி சாரியாக இடம் பெயர்ந்து அயல் கிராமங்களிலும் தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையாகச் சென்றிருந்தனர்.

இந் நிலையில் இங்கே காணப்பட்ட பிரதேச சபை உப அலுவலகம் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டது. அருகில் இருந்த பாடசாலை இருந்த இடந் தெரியாது அழிக்கப்பட்டது.

மிக அமைதியான சூழலில் நிம்மதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் போக்கிடம் இல்லாது அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில் இவ் வைத்தியசாலையும் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து ஈற்றில் இயக்கச்சிப் பிரதேசத்தில் இயங்கி வந்ததாக அறிகின்றேன்.

போர் மேகங்கள் மெல்லக் கலைந்து ஒரு அமைதி நிலை ஏற்பட்ட போதும் இப்பகுதியில் காணப்பட்ட மிகச் செறிவான நிலக் கண்ணி வெடிகள், வெடிக்காத எறிகணைகள் என பல தரப்பட்ட வெடிபொருட்கள் இப்பகுதி முழுவதும் பரந்து கிடந்த காரணத்தினால் மக்கள் மீளக் குடியமர மிகவுந் தயங்கிப் பின்னடித்தனர்.

இப்பகுதியில் உசன் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் கவனிப்பாரற்று கால் வைக்கக்கூட முடியாத நிலையில் மிகக் குறைவான விலைக்கு விற்பனை செய்வதற்குந் தயாராக இருந்ததாகவும் எனக்கு எடுத்துக் கூறப்பட்டது.

எனினும் நிலக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் இப்பகுதிகளிலுள்ள பெருவாரியான கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல குடியேறித் தமது இயல்பு வாழ்க்கைக்குத் தம்மை இன்று தயார்படுத்தி வருவது சற்று மன ஆறுதலைத் தருகின்றது.

எந்த ஒரு சூழலிலும் நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். இன்றைய ஒரு குறிப்பிட்ட அவலநிலை என்றென்றும் இருக்கும் என்று மனமுடைந்து இருந்துவிடக் கூடாது. அன்றைய அவல நிலை இன்று மறைந்து வருவது இயற்கையின் இந்தப் பரிமாணத்தையே தெற்றென விளக்குகின்றது.

இந் நிலப்பரப்பானது கூடுதலாக மணற் பாங்காக காணப்படுவதால் இப்பகுதி தென்னைச் செய்கைக்கு மிக உகந்த இடமாக அடையாளங் காணப்பட்டு மிகப் பெரியளவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னைப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு எமது தெங்குத் தேவைகள் அன்று பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

அதன்பின் அழிவுகள் எம்மை அணைத்தன. ஆனால் பழைய நிலையை மீண்டுங் கொண்டு வருவதற்கு இன்று எமக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்களாவது தேவைப்படும்.

எனினும் இம் முயற்சிகளில் நீங்கள் மனந் தளராது ஈடுபட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள தெங்கு அபிவிருத்தி நிறுவனம் தென்னம் நாற்றுக்கள் மற்றும் நீர் பாய்ச்சும் கருவிகள் என பலதரப்பட்ட உதவிகளை மானிய அடிப்படையிலும் இனாமாகவும் வழங்கி வருகின்றார்கள்.

அவற்றைப் பெற்றுப் பயனடைய எமது மக்கள் முன்வர வேண்டும். தென்னைப் பயிர்ச் செய்கையை விருத்தி அடையச் செய்ய வேண்டியது எமது முக்கிய கடப்பாடாக உள்ளது.

பளை சார்ந்த இடங்களெல்லாம் 60, 70 வருடங்களுக்கு முன்னர் எமது சிறு வயதுகளில் கூட தென்னை விருத்திக்குப் பெயர் போன இடங்களாக அடையாளம் காட்டப்பட்டன.

இன்று நடப்படுகின்ற தென்னங் கன்றுகள் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் உங்களைத் தாங்கிக் கொள்ள கூடிய வருவாயை வழங்கக் கூடிய மரங்களாகக் காட்சி தருவன.

இதை அறிந்து தான் யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்த செல்வந்தர்கள் இந்தப் பளைப் பகுதிக்கு வந்து ஏக்கர் கணக்கான காணிகளை அல்லது தென்னந் தோப்புக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பராமரித்துப் பொருளீட்டி மிகச் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

நாம் ஏனையவர்களின் கைகளை எதிர் பார்ப்பதை விட எமக்குச் செல்வத்தை அள்ளித்தரக் கூடிய இவ்வாறான பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை வளப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற செய்தியை இந்த நல்ல தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு இனி எமது இலவச ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வருவோம்.

இன்றைய இந்த இலவச ஆயுள்வேத வைத்தியசாலைத் திறப்பானது இப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகவே கருதப்படல் வேண்டும்.

இந்த இடத்தில் இருந்து சுமார் 2கிலோ மீற்றர் தூரத்தில் பளை அரசாங்க ஆங்கில வைத்தியசாலை இருப்பது உண்மைதான். அவசர தேவைகளுக்கு அந்த ஆஸ்பத்திரிக்குச் செல்லலாம் என்பதும் உண்மைதான்.

அப்படியானால் இந்த ஆயுள்வேத வைத்தியசாலை எதற்கென்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் 2கிலோ மீற்றர் தூரத்தில் அரசாங்க ஆங்கில வைத்தியசாலையும் அதற்கு சற்று அப்பால் காசு கொடுத்து வைத்திய வசதிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய பிரத்தியேக வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன.

அத்துடன் எம்மிடையே ஆங்கில அல்லது மேலை நாட்டு வைத்திய முறைகளில் இன்று நாட்டங் கூடுதலாக இருப்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

ஆனால் இந்த மேலைத்தேய வைத்திய முறையை எமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் போன்ற மேலைத்தேயத்தவர்கள் தமது வைத்திய முறைமைகளைக் கைவிட்டு கீழைத்தேய வைத்திய முறைகளில் நாட்டங் கொண்டு Herbal Treatment முறைக்கு கவரப்பட்டுள்ளார்கள்.

இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வைத்தியங்களுக்காக அவர்கள் படையெடுப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையின் தெற்கில் கூட பல வெளிநாட்டவர்கள் வந்து சித்தாலேப போன்ற ஆயுள்வேத சிகிற்சை நிலையங்களில் சிகிற்சை பெற்றுச் செல்கின்றார்கள்.

என் பால்யப் பருவத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் கம்பஹா வெதமஹத்தையா என்ற ஆயுள்வேத வைத்தியர்களிடமே கொழும்பில் சிகிற்சை பெற்றோம்.

வெளிநாட்டவரிடம் ஏன் இந்த மாற்றம் என்று எண்ணத் தலைப்பட்டால் கீழைத்தேய வைத்திய முறைகளில் பக்க விளைவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

அத்துடன் இவ் வைத்திய முறைக்கான செலவீனங்கள் மிகக் குறைவானவை. பலவிதமான இயந்திரங்களைப் பாவிக்க வேண்டியதால் மேலைத்தேய மருத்துவமுறை மிகவும் விலை கூடிய மருத்துவ முறையாகத் தற்பொழுது வளர்ந்துள்ளது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மேலைத்தேய முறைசார்ந்த வைத்தியர்கள் கூட கைநாடி பார்த்தே மருந்து தந்தார்கள். இன்று எல்லாவற்றையும் இயந்திரத்தினிடமே கையளித்து விட்டார்கள்.

எனது குடும்ப வைத்தியராக இருந்த காலஞ்சென்ற மேலைத்தேய வைத்தியமுறை சார்ந்த டாக்டர் தனபாலசுந்தரம் அவர்கள் அடிக்கடி கூறுவார் “இன்று எமது வைத்தியர்கள் வைத்தியஞ் செய்வதில்லை.

மக்களின் நாடி பார்ப்பதில்லை. இயந்திரங்களின் நாடியையே பார்க்கின்றார்கள்” என்று! இவற்றை எல்லாம் மேலைத்தேயத்தவர்கள் கவனத்தில் எடுத்துத் தான் கீழைத்தேய வைத்திய முறைகளை நாடி இங்கு ஓடி வருகின்றார்கள்.

ஆனால் நாமோ அதற்கு மாறாக எமக்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய இந்த நாட்டு வைத்திய முறைகளைக் கைவிட்டு இரசாயனக் கலவைகளை நோக்கியே பயணஞ் செய்கின்றோம்.

என்றாலும் அதுபற்றிப் பிழை சொல்வதற்கில்லை. ஏனெனில் எமது பாரம்பரிய கீழைத்தேய வைத்திய முறைகளில் பத்தியங்கள் அதிகம். மருந்துகளை உட்கொள்வதற்கு கற்பூரவள்ளிச்சாறு, வெற்றிலைச்சாறு, தேன், பனங்கட்டி என பல வித பொருட்களைத் தேட வேண்டியுள்ளது.

அத்துடன் இந்த மருந்து வகைகளை உட்கொள்வதிலுஞ் சற்றுச் சிரமங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மணம், சுவை என்பன வயிற்றைக் குமட்டுவனவாக உள்ளன.

பூச்சு எண்ணெய்கள் அருவருக்கத்தக்க மணத்தை உடையன. ஒரு இளம் மனைவி தன் கணவரிடம் “உங்கள் மருத்தெண்ணை முக்கியமா நான் முக்கியமா என்று முடிவெடுங்கள்.

எண்ணைதான் முக்கியமென்றால் நான் விவாகரத்து பெறப் போகின்றேன்” என்று கூறியதாக நான் கேள்விப்பட்டேன்!

ஆனால் இப்போது அந்த நிலைகூட மாற்றப்பட்டு வருவதை நான் அறிவேன். இன்று மருந்துகள் தயாரிப்பதற்கென தனியான பிரிவு, மருந்து ஆராய்ச்சிக்கென இன்னோர் பிரிவு என்று மட்டுமல்லாமல் சுவை, மணம் என்பவற்றைப் பிரதியீடு செய்யக்கூடிய வகையிலும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆகவே இப்போது இலவச ஆயுள்வேத வைத்திய சாலையின் சேவைகளை மக்கள் பெருமளவில்ப் பெற்றுப் பயன்பெற முடியும்.

இப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிக்கன வாழ்க்கை முறைகளில் நாட்டம் கொண்டவர்கள். எனவே இன்று இங்கே அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையை இப்பகுதி மக்கள் வரவேற்பார்கள்.

அவர்களுக்கு இவ் வைத்தியசாலை சிறந்த சேவையை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இவ் வைத்தியசாலையில் கடமை புரியப் போகும் டாக்டர் அவர்களையும், அவரின் உதவியாளர்களையும் இத்தருணத்தில் வாழ்த்துகின்றேன்.

இந்தச் சேவையைச் சிறந்த முறையில் வழங்குவதற்கு பாடுபட்டு உழைத்த பச்சிலைப்பள்ளி பிரதேசசபைக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
« PREV
NEXT »

No comments