இலங்கையின் தென்பகுதி கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்ம விண்வெளி பொருள் ஒன்று, எதிர்பார்ப்புக்கு மாறாக விண்ணிலேயே எரிந்துள்ளது.
விண்வெளி குப்பை என்று கூறப்பட இந்த மர்மப் பொருள் இலங்கையின் தென்கடல் பரப்பில் 62 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை விழும் என்று முன்னர் எதிர்கூறப்பட்டது.
WT 1190F என்று பெயரிடப்பட்ட விண்வெளி மர்மப்பொருள் சரியான பாதையில் இலங்கை தென் கடற்பரப்பை நோக்கி பயணித்திருந்ததாக கொழும்பிலுள்ள ஆர்தர் சி கிளார்க் அறிவியல் ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது.
சுமார் ஏழு அடி விட்டம் கொண்ட இந்தப் பொருள், புவியின் காற்றுமண்டலத்துக்குள் நுழைந்தவுடன், தீப்பிடித்துவிடும் என விண்வெளி ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
WT 1190F விழும் எதிர்பார்க்கப்பட்ட, தங்காலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் ஆர்தர் சி கிளார்க் மையத்தின் ஆய்வாளர்கள், சிறிய ஆய்வுக் கூடம் ஒன்றை அமைத்து கண்காணிப்பு நடவடடிக்கையை மேற்கொண்டனர்.
எனினும் அந்த மர்மப்பொருளை கண்களால் காணும் வாய்ப்பு அங்கு வந்தவர்களுக்கு கிடைக்காவிடினும், அது காற்றுவெளிக்குள் வந்தவுடன் தீ பிடித்து எரிந்ததை விசேட விமானம் மூலம் கண்காணித்ததாக ஆர்தர் சி கிளார்க் ஆய்வு மையத்தின் உதவி ஊடக இயக்குநர் சிந்தக்க விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆய்வுகளுக்கான விண்ணுக்கு ஏவப்படும் பொருட்களின் ஒரு சிதைவாக இந்த மர்மப்பொருள் இருக்கலாம் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் விண்வெளி ஆய்வாளரான இந்திக்க மெதகங்கொட பிபிசிடம் தெரிவித்தார்.
மனிதர்கள் ஆய்வுகளுக்காக பல பொருட்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றனர் எனவும், அவ்வாறான ஒரு பொருளின் சிதிலமே இவ்வாறு புவி நோக்கி வந்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment