Latest News

November 13, 2015

அய்யா சாமீகளா... நிலைமை தெரியாம அடிச்சி விடாதீங்க!
by Unknown - 0

முன்பெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானதும், அதன் வெற்றி தோல்வி மற்றும் வசூல் விபரம் தெரிய குறைந்தது 10 நாட்களாவது ஆகும். அட ஒரு வாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இணையத்தின் புண்ணியம் அல்லது சாபத்தில் இப்போதெல்லாம் ஒரு ஷோ முடிந்ததுமே படம் பண்டலா, பாக்ஸ் ஆபீஸ் கில்லாடியா என்பது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.

ஆனால் இதே இணையத்தைப் பயன்படுத்தி அந்தந்த நடிகரின் ரசிகர்கள் மற்றும் 'வேண்டப்பட்டவர்கள்' பரப்பும் தவறான தகவல்கள் படம் பிரமாண்ட வெற்றி என்பது போன்ற தோற்றத்தை முதலில் ஏற்படுத்திவிடுகின்றன. பத்து நாட்கள் கழித்து உண்மை நிலைமை தெரிய, பல்லிளிக்க ஆரம்பித்துவிடுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வாரத்தில் விஜய்யின் புலி படம் ரூ 78 கோடியை வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று அவர்களே வெளியிட்ட எழுத்துப் பூர்வ அறிவிப்பில் படம் பெரும் தோல்வி என்றும் ஒரு பைசா தேறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

இப்போது தீபாவளிப் படங்களின் வெளியீட்டுக்கு வருவோம். மூன்று படங்கள் வெளியாகின. அவற்றில் இரண்டு, முன்னணி நடிகர்களின் படங்கள். பெரிய எதிர்ப்பார்க்க இந்தப் படங்கள் வெளியான நேரம், மழை பிய்த்து உதற ஆரம்பித்துவிட்டது. இன்று வரை ஓயாத மழை. வட மாவட்டங்களில் முன்னெப்போதும் காணாத பெருமழை பெய்து கொண்டிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு ஒதுங்கக்கூட தியேட்டர் பக்கம் போக முடியாத நிலை பலருக்கு. இந்த மழையால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது தூங்காவனம் மற்றும் வேதாளம் வசூல். 

திருப்பத்தூர், வேலூர் போன்ற நகரங்களில் எளிதாக இந்த இரு படங்களையும் பார்க்க முடிந்தது. திருச்சி, தஞ்சையில் முதல் நாள் வேதாளம் டிக்கெட்டுகள் விலை ரூ 500 வரை விற்றனர். அடுத்த நாளே நிலைமை தலைகீழ். டிக்கெட்டுகள் எளிதாகக் கவுன்டர்களில் கிடைத்தன. தூங்காவனத்துக்கு திரையிட்ட இடமெல்லாம் எளிதாக டிக்கெட்டுகள் கிடைத்தன, சென்னையின் சில மால்கள் தவிர்த்து. 

அமெரிக்காவில் இந்தப் படங்களுக்கு என்ன வரவேற்பு என்பதை ஏற்கெனவே செய்தியாகத் தந்திருக்கிறோம். ஆனால் இந்த உண்மை தெரியாமல், அல்லது தங்களது மேசைக் கணக்குப் படி ஒரு தொகையை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக அடித்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர் இணையப் பிள்ளைகள் சிலர். "படம் நல்லாருக்கா இல்லையா என்பதை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடியும். 

ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஒண்ணும் அவ்வளவு திருப்தியா இல்லை. பல தியேட்டர்களின் வசூல் நிலவரம் இன்னும் வந்து சேரவே இல்லை. வேதாளம் படத்தின் முன்பதி நிலவரம் அமோகமாக இருந்தது. அதை வைத்து தோராயமாக ஒரு கணக்கைச் சொல்கிறார்கள். 

இன்னும் ஓரிரு தினங்களில் நிலைமை தெளிவாகிவிடும்," என்றார் நம்மிடம் ஒரு விநியோகஸ்தர். அய்யா சாமிகளா... உண்மை நிலை தெரிஞ்சா சொல்லுங்க.. குத்துமதிப்பா அடிச்சி விடாதீங்க!

« PREV
NEXT »

No comments