கொழும்பில் சரிந்த துல்லியமான இலக்கு...!!!
லலித் அத்துலக் முதலி...
எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ், சிங்கள மக்களால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும். 1977-1988 வரை இலங்கை அரசியலில் மிகவும் சக்திமிக்க அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
1980 களில் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து, தமிழரின் போராட்டத்தை நசுக்கப் பாடுபட்டவர். அதனால் பல ஆயிரம் தமிழர்களின் இரத்தம் இவரின் கைகளை நனைத்திருந்தது. தமிழர் போராட்டம் தீவிரம் அடைய இவரும் மிக முக்கியமானவர்.
1988இல் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றி ஜனாதிபதியாக ஆனபின்னர், பிரேமதாசாவுடன் அந்தக் கட்சியில் இரு தூண்களான காமினி திசாநாயக்காவிற்கும், லலித் அத்துலக் முதலிக்கும் அதிகாரப் போட்டி மறைமுகமாக இருந்து வந்தது.
அந்தப் பகை வளர்ந்து, பிரேமதாசவுடன் முரண்பட்டு 1991ம் ஆண்டு இருவரும் தமது ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பிரேமதாசாவிற்கு எதிராக, புதிதாக "ஐக்கிய தேசிய முன்னணி" (DUNF) என அழைக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி இவர்களால் உருவாக்கப்பட்டது.
இவர்களின் புதுக் கட்சியின் உருவாக்கத்தையும், அவர்களின் அசுர வளர்ச்சியையும் பிரேமதாசா மட்டுமல்ல தமிழர் தரப்பும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த முக்கியமான இருவரும் தமிழர்களால் மன்னிக்க முடியாதவர்கள்.
அதில் காமினி என்பவர்தான், தமிழரின் பொக்கிசமான யாழ் நூலகத்தை தனது ஆதரவாளர்கள் மூலம் எரித்தார், 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை உருவாக்கி பல ஆயிரம் மக்களை கொன்று, அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிய சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர்களும் இந்த இருவருமே.(அடுத்த எனது பதிவில் காமினி பற்றி பார்ப்போம்)
இந்த இருவருடனும் கூட்டுச் சேர்ந்தவர்களும் தமிழர் விரோத போக்கில் கடுமையாக உள்ளவர்களே. இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழரின் அழிவைத் தடுக்க முடியாதென்பதை, தமிழர் தரப்பும் சரியாகக் கணித்திருந்தது. அதனால் இந்தப் பேராபத்தை தடுக்கத் தமிழர் தரப்பும் தமது காவலர்களை களமிறக்கியது.
மிகவும் நெருக்கடியான நேரம். சிங்கள தலைநகரில் காற்றுப் புக முடியாதளவு பாதுகாப்புக் கெடு பிடி உச்சம் பெற்றிருந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் இருந்தன. இந்த நேரத்தில் சிங்களத்தின் பாதுகாப்பின் ஓட்டை ஒன்றின் ஊடாக கைத்துப்பாக்கியால் சுடுவதில் வல்லவனான ரகு என்ற வீரன் உள் நுழைந்ததை சிங்களம் அறியவில்லை.
இவர்கள் பிரேமதாசவிற்கு எதிரானவர்கள் என்பதால் ஐக்கிய தேசிய முன்னணி (DUNF) கட்சியினருக்கும், அவர்களின் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு கெடுபிடி குறைவாகவே இருந்தது. அதுவே இந்த தாக்குதலைத் திட்டமிட்ட அதிகாரிகளுக்கு இலகுவான திட்டம் ஒன்றைப் போடக் கூடியதாக இருந்தது.
வழமையான தற்கொலை தாக்குதல் அல்லாமல், இலக்கை நெருங்கி துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் செல்லும் திட்டத்தைப் போட்டு அதற்கான வீரனையும் தயார்படுத்தி இருந்தனர். பல நூறு ரவைகளை பயிற்சி இலக்கை நோக்கி குறி தவறாது சூட்டுப் பயிற்சி எடுத்த அந்த வீரன், தனது மறைவிடத்தில் உண்மையான இலக்கிற்காகக் காத்திருந்தான்.
அந்த நேரத்தில் சிங்கள தலைநகரில் இந்தத் தாக்குதலை நெறிப்படுத்திய தமிழர் அதிகாரியால் லலித்தின் கூட்டங்களுக்கான நேரப்பட்டியல் முன் கூட்டியே உச்ச புலனாய்வுத் தகவல் ஊடாக பெறப்பட்டிருந்தது. தாக்குதலுக்குரிய நாளாக ஏப்ரல் 23, 1993 அன்று தெரிவு செய்யப்பட்டது.
அன்று பொரளையில் மாலை கூட்டம் ஒன்றை முடித்தபின், அடுத்த கூட்டம் கிருலப்பனையில் நடைபெற இருந்தது. முதலில் பொரளையில் தாக்குதலுக்கான முயற்சி கைகூடாத நிலையில், கிருலப்பனையில் முயற்சிக்க தீர்மானிக்கப்பட்டது. அங்கு இரவு 8.00 மணிபோல் கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் இயற்கையும் அவர்களுக்கு கை கொடுத்தது.
ஆம், திடீர் என பெரும் மழை ஒன்று பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் மேடையை நோக்கி நகரத் தொடங்கினர். இதைச் சாதகமாகக் கொண்டு அந்த வீரன் மேடையை நோக்கி மக்களோடு மக்களாக நகர்ந்தான். 15M இடைவெளியில் இலக்கை நெருங்கியதும், கண்ணிமைக்கும் நேரத்தில் தனது 9MM கைத் துப்பாக்கியை எடுத்த அந்த வீரன் எந்தவித பதற்றமும் இல்லாது மூன்று குண்டுகளை லலித்தின் நெஞ்சில் துல்லியமாக இறக்கிய பின், தன்னைப் பிடிக்க வந்த, லலித்தின் மெய்ப்பாதுகாவல் அதிகாரியை தாக்கி விட்டுத் தப்பி வெளியில் ஓடினான்.
போட்டு வைத்த திட்டத்தின்படி அந்த வீரனுக்காக வாகனமொன்றில் காத்திருந்த நண்பர்கள் வாகனத்தை மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தனர். ஏனெனில் அந்த வீரனைப் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்தமையால், ஓடும் வாகனத்தில் ஏறுவதற்காக தனது துப்பாக்கியை வயிற்றில் சொருகும் போது, தவறுதலாக அது வெடித்து வயிற்றில் பெரும் காயம் ஏற்பட்டது.
மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கெடு பிடிக்கு மத்தியில் அந்த வீரனுக்கு வைத்தியம் செய்ய முடியாத நிலை. அதற்கு முயற்சித்தாலும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களின் புலனாய்வு வலையமைப்பும் எதிரியிடம் மாட்டிக் கொள்ளும் என்பதால் அந்த வீரன் நிலைமையை உணர்ந்து சையனைட் அருந்திவிட, கண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
பெயருக்கோ, புகழுக்கோ ஆசைப்படாத அந்த வீரன் தான் நேசித்த அந்த மக்களுக்காக, அவர்களை கொன்றவனுக்கு அவர்கள் இடத்திலேயே வைத்து, தண்டனையை கொடுத்து கண் மூடினான் அந்த ஒப்பற்ற வீரன்.
அடுத்த நாள் அவனது உடலை வீதி ஓரத்தில் இருந்து கண்டெடுத்தனர்.
இந்தத் தாக்குதலுக்கான விசாரணையை மேற்கொள்வதற்கு "ஸ்கொட்லண்ட் யாட்டின்" உதவி பெறப்பட்டிருந்தது. துரித விசாரணை மூலம் அந்தத் தாக்குதலை செய்தவர் அப்பையா பாலகிருஸ்ணன் என்று இனம் கண்டதாகக் கூறினர். விசாரணையின் முடிவில் புலிகள் மேல் கையைக் காட்டி விட்டு விசாரணையை முடித்திருந்தனர் ஸ்கொட்லண்ட் யாட்டினர்.
இவர்கள் எதைச் சொன்னாலும் இறுதியில் எமது மக்கள், இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடிய போதும், அந்த ஒப்பற்ற வீரனுக்கும் மெளனமாக அஞ்சலியும் செய்தனர்..!!
- ஈழத்து துரோணர்.
No comments
Post a Comment