வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் சுட்டுக் கொலை செய்திருக்காவிட்டால், தற்போதைய விசாரணையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை கொலைசெய்தமை கடந்த அரசாங்கம் செய்த பாரிய வரலாற்று தவறெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை படையினர் மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலித் தலைமைகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதனையே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முன்னதாகவே உரிய விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல செயற்பாடுகளை அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்க முடியுமென குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து, அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை கொலை செய்ய எடுத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக்குற்றம் தொடர்பில் தனித்தனியாக ஒவ்வொருவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, வழக்குத் தொடர முடியதெனவும் அவ்வாறு நடைபெற்றால் அது முடிவுக்குக் கொண்டுவரப்படமாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தாம் புலிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தமையால் புலம்பெயர் சமூகங்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும், இலங்கை அரசாங்கமும் தம்மை விமர்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ள அடம்ஸ் தாம் யாருக்கும் சார்பாக கருத்து தெரிவிக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment