இன்றைய தினம் இடம்பெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களினால் பொர வெற்றி பெற்றது.
தொடரைத் தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டும் எனும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதல் விக்கெட்டுக்காக 33 ஓட்டங்கள் மாத்திரம் பகிரப்பட்ட நிலையில் அம்லா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த டி கொக் மற்றும் டு பிளசிஸ் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தைப் பகிர்ந்தது.
இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 154 ஓட்டங்களைப் பகிர்நதிருந்த வேளையில் டி கொக் 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸின் ஆட்டத்தை இந்திய பந்து வீச்சினால் கட்டுப்படுத்த முடியவில்லை. 360 டிகிரி ஆட்டத்திற்கு பெயர் போன டிவில்லியர்ஸ் இந்திய பந்து வீச்சினை மைதானத்தின் நாலா பக்கங்களிற்கும் சிதற விட்டார்.
டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளஸிஸ் தலா 119 மற்றும் 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் டுபிளஸிஸ் உபாதை காரணமாகவே மைதானத்தை விட்டு வௌியேறியமை குறிப்பிடத்தக்கது. டிவில்லியர்ஸின் 119 ஓட்டங்கள் வெறுமனே 61 பந்துகளில் பெறப்பட்டதுடன் அதில் 11 ஆறு ஓட்டங்களும் 3 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.
50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக் அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 438 ஓட்டங்களைக் குவித்தது. இந்த 438 ஓட்டங்களுடன் அதிகூடிய தடவை 400 ஓட்டங்களைக் கடந்த அணி எனும் சாதனையையும் படைத்தது. இதற்கு முன்னர் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தலா 5 தடவை 400 ஓட்டங்களைக் கடந்திருந்தன. அத்துடன் ஒருநாள் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கிய போதிலும் ஹர்பஜன் சிங், ரெய்னா மற்றும் குமார் ஆகியோர் தலாா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதில் ஒருநாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை வழங்கிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பிரவீன் குமார் படைத்தார். இவர் மொத்தமாக 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு 439 எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே விக்கெட்டுக்கள் சீரான இடைவேளையில் சரிய ஆரம்பித்தன. எனினும் ரஹானே மற்றும் தவான் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களைப் பகிர்நத போதிலும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை.
தவான் 60 ஓட்டங்களையும் ரஹானே 87 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காது போகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. .36 ஓவர்கள் நிறைவில் 224 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில் ஸ்டெய்ன் 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இது இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். இதற்கு முன்னர் இலங்கை அணியுடனான போட்டியில் 245 ஓட்டங்களால் தோல்வியடைந்தமையே இந்திய அணி பெற்ற மிகப்பெரிய தோல்வியாகும்.
போட்டியின் நாயகனாக டீ கொக்கும் போட்டித் தொடரின் நாயகனாக டீ வில்லியர்ஸும் தெரிவு செய்யப்பட்டனர். இதுவே தென்னாபிரிக்க அணியால் இந்தியாவிற்கு எதிராக இந்திய மண்ணில் பெற்ப்பட்ட முதல் தொடர் வெற்றியாகும். அத்துடன் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்த மண்ணில் இந்திய அணி பெறும் முதல் தொடர் தோல்வியும் இதுவாகும்.
No comments
Post a Comment