Latest News

October 16, 2015

வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் இனியும் தாமதிக்கக் கூடாது!
by admin - 0


நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி த்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்  யாருமே கவனம் செலுத்தாமையால், வாழ வேண்டிய தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்ற அவலம் நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இலங்கை ஆட்சியாளர்களின் திருகுதாளங்களை விட, தமிழ் அரசியல் தலைமைகளின் திருகுதாளங்களே பிரமாதமானவை.

இப்போது கூட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர் என்றவுடன் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையை காப்பாற்ற விரும்பும் சிலர் நேற்று முன்தினம் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.

காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையான நேரத்தில் ஒரு உண்ணாவிரதம் நடந்து முடிந்தது.
பார்த்தீர்களா? எங்கள் இளைஞர்களின் விடுதலை க்காக, ஒரு பகல் பொழுதில் மதிய போசனத்தையேனும் விடுத்து உண்ணாவிரதம் இருக்க முடியாமல் போயிற்று.

பரவாயில்லை! இப்போது இந்த நாட்டில் அரசியல் தரப்புகளின் பெரும்பாலான செயற்பாடுகள் ஊடகங்க ளுக்கானவையாக இருப்பதைக் காண முடிகிறது.

ஏதோ! இந்த உலகத்தில் இறைவன் என்றொரு சக்தி இருந்தால் அந்த சக்தி இந்த நாடகங்களுக்கு தண் டனை கொடுத்தாலன்றி வேறு எந்த வகையிலும் இத்தகைய  போலித்தனங்களுக்கு மருந்து கிடையாது.

இது ஒருபுறமிருக்க, நீண்ட காலமாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் குரல் கொடுப்பது கட்டாயமானது. இங்கு எந்தவித அரசியல் பேதங்க ளுக்கும் இடமிருக்கக் கூடாது.
விளக்கம், விசாரணைகளை தாமதப்படுத்தி தமிழ் இளைஞர்களை சிறைகளில் அடைத்து வைத்திருப்ப தானது அப்பட்டமான மனித உரிமை மீறல். 

அதிலும் தமிழ் இளைஞர்கள் என்பதற்காக நடக்கின்ற இந்த அக்கிரமத்தை தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களும் கண்டிக்க வேண்டும்.
எனவே, எங்கள் தமிழ் இளைஞர்களின் விடுத லைக்காக நாம் அனைவரும் குரல் கொடுப்பது - அகிம்சை வழியில் எமது எதிர்ப்பை தெரிவிப்பது மிகவும் அவசியமானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஒருமுகமாக நிறைவேறியதையடுத்து முன்னாள் போராளிகள் மீது மீண்டும் விசாரணை நடப்பதற்கான சாத்தியம் உண்டு.

விசாரணை என்ற பெயரில் முன்னாள் புலிப் போராளிகள் மீது வழக்குத் தொடுத்து அவர்களைக் குற்றவாளிகளாகக் கண்டு தண்டனை வழங்கி, புலிகளால் இனி இந்த நாட்டுக்கு எந்த அச்சமும் இல்லை என்ற ஒரு சூழ்நிலையை தோற்றுவிப்பதே இலங்கை ஆட்சியாளர்களதும் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையினதும் கூட்டு நோக்கமாகும்.

இந்தப் பேராபத்திலிருந்து தமிழ் இளைஞர்கள்- தமிழ் சமூகம் காப்பாற்றப்படவேண்டுமாயின் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்வதுடன் நடைமுறையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் இதில் அங்கம் பெற வேண்டும்.
குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் வடக்குத் தலை வர்கள் இதில் அங்கம் பெறுவதுடன் இலங்கை அரசுடன் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பேச வேண்டும்.

இதைச் செய்வதற்கு முதல்வர் விக்னேஸ்வரனும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் தாமதித்தால் விலைபோன தமிழ்த் தலைவர்கள் சிலர் தமிழினத்தின் நரம்பு நாடி களை அறுத்து, உரிமை என்று இனிமேல் உச்சரிக்க மாட்டோம் என்ற வலுவிழந்த நிலைக்கு தமிழர்களை நிச்சயம் கொண்டுவருவர். ஆகையால் தமிழினம் காக்க வாருங்கள். கூட்டமைப்பை புனரமையுங்கள்.
« PREV
NEXT »

No comments