Latest News

October 28, 2015

பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினர், தென்னிந்திய நடிகர் சங்கத்தினருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
by அகலினியன் - 0

பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினர், தென்னிந்திய நடிகர் சங்கத்தினருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

பிரான்ஸில் இயங்கும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினராகிய நாம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அனுப்பிவைத்த கடிதத்தினை இங்கு, ஊடகங்களுக்காக இணைக்கிறோம்.

வணக்கம், அன்புடையீர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிய தலைவராகத் தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 80 ஆண்டுகளுக்கு மேலான பழமைமிக்க இந்தச் சங்கத்தின் பணிகள் மென்மேலும் சிறந்தோங்க வேண்டுமெனவும், அதன்மூலம் தமிழ் திரைப்படத்துறை நீடித்து நிலைக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம். 

இந்தச் சந்தர்ப்பத்திலே ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினராகிய நாம் உங்களிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைக்க விரும்புகிறோம். ஈழத் தமிழர் திரைப்படச் சங்கமானது புலம்பெயர் திரைப்படக் கலைஞர்களால் பிரான்ஸ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நோக்கமானது ஈழத் தமிழர்களுக்கான அடையாள திரைப்படமாக நீள், குறும்திரைப்படங்களை உருவாக்குவதிலும் அவற்றை தொழில் மயப்படுத்துவதன் மூலம் எமது படைப்பாளிகளை தொழில் சார் கலைஞர்களாக உருவாக்கும் நோக்கோடும் உலகத் தமிழ் திரைப்படப் படைப்பாளிகளையும், கலைஞர்களையும் மற்றும் பல்லின பன்முக துறை சார்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து. ஈழத் திரைப்படத் துறையை வளர்ப்பதே நோக்கமாக கொண்டது.

இந்நிலையில் எமது அன்பான கோரிக்கை ஒன்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் இருக்கும், தமிழீழ உணர்வுமிக்க படைப்பாளிகள், ஈழம்சார் படைப்புக்களை உருவாக்கிவருகின்றனர். ஈழத்தமிழர்கள் அனுபவித்த வலிகளை உலக்குக்கு எடுத்துக்கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அவர்கள் எடுக்கும் இந்த முயற்சி வியந்து பாராட்டத்தக்கது. ஈழம்சார்ந்த படைப்பு ஒன்றை உருவாக்குவதும் வெளியிடுவதும் எந்தளவுக்கு நெருக்கடி மிக்கது என்பதை நாம் நன்கு அறிவோம். அப்படியிருந்தும்கூட, சோர்ந்துவிடாமல் படைப்புக்களை எடுக்கும் படைப்பாளிகள் என்றுமே போற்றுதற்குரியவர்களே. ஆனால், இவ்வாறு ஈழம்சார்ந்த கதைகளை உருவாக்கும்போது, அதில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

ஒரு போராட்ட வரலாறு என்பது, போராளிகளினதும் பொதுமக்களினதும் இரத்தத்தால் எழுதப்படும் வரலாறு என்பதால், அதில் எள்ளளவேனும் கருத்துப் பிழையோ, காட்சிப்பிழையோ இருப்பதை அனுமதிக்க முடியாது. அது, இரத்தம் சிந்திய தியாகிகளின் ஆத்மாக்களைக் காயப்படுத்தும் செயலாகும்.

அண்மையகாலங்களில், தென்னகத்து திரைப்படத்துறையில் இருந்து ஈழம் சார்ந்த கதைகளோடு வந்த படங்களை நாம் ஆராய்ந்தபோது, அவற்றிலே பல கருத்து மற்றும் காட்சிப் பிழைகள் இருப்பதைக்கண்டு வேதனையடைந்தோம். சில போராளிகளின் போராட்ட வாழ்க்கையைக் கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட படங்களுக்கும் அந்தப் போராளிகளின் உண்மையான வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. சரியான முறையில் தகவல்கள் திரட்டப்படாமையே இதற்கான காரணமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறை, பேச்சுமுறை, நடை, உடை, பாவனை எல்லாமே தனித்துவமான பண்புகளைக் கொண்டதாகும். போராளிகளின் வாழ்வியலும் அப்படியானதே.

எனவே படைப்பு ஒன்றை உருவாக்கும்போது, பல தகவல்களையும் தரவுகளையும் திரட்டி, ஒன்றுக்குப் பலமுறை சரிபார்த்த பின்பே படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பணியில் உதவிசெய்ய ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினராகிய நாம் தயாராக இருக்கிறோம். எமது போராட்ட வரலாறு சரியான முறையில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பது விருப்பமாகவும் உறுதியான நிலைப்பாடாகவும் இருக்கிறது. 

எனவே, படைப்புக்கள் குறித்த விபரங்களை எமக்கு அறிவித்தால், படைப்பிலே உண்மைத்தன்மையையும் எதார்த்தத்தையும் கொண்டுவர நாம் உதவி செய்வோம். மேலும் துறைசார் தகவல்களையும் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளையும் நாம் வழங்கியுதவுவோம். தவறான சித்தரிப்புக்களுடனும் திரைப்படத்திற்கே உரித்தான சில அம்சங்களைக் கலந்தும் எடுக்கப்படும் திரைப்படங்களால் யாருக்குமே பயன் இல்லை என்பதை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறோம். எனவே இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, படைப்பாளிகள் செயல்பட, தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி

தி. அன்ரனி றொபேட் (தலைவர்)
குணா ஆறுமுகராசா (செயலாளர்)
19.10.2015 பிரான்ஸ்
« PREV
NEXT »

No comments