கொழும்பில் முன்னர் பலரை கடத்தி சென்று சித்திரவதை செய்து கொலை செய்ய இக்கட்டிடத்தில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய சிவராமை புளொட் இயக்க கொழும்பு பொறுப்பாளர் பீற்றரும் சிறிலங்கா புலனாய்வு பிரிவினரும் கடத்தி சென்று இந்த அலுவலகத்தில் வைத்து சித்திரவதை செய்த பின்னரே பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் கொலை செய்து வீசியிருந்தனர்.
இந்த கட்டிடத்தில தான் சிவராமண்ணையை கொண்டு வந்து வைச்சிருந்தவங்களாம் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு தமிழ் இயக்க தலைவர் ஒருவர் தன்னுடைய சகாக்களுக்கு தெரிவித்தாராம்.
இந்த கூட்டத்தில் ஆர்.சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிறிகாந்தா, கருணாகரம் ( ஜனா) துரைரத்தினம், உட்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா இதில் கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டத்தில் ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும், தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாப்பு குறித்த தமிழரசுக் கட்சியின் யோசனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 29ம் திகதி கட்சித் தலைவர்கள் கூடி பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி மாநாட்டின்போது ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள யோசனைகள் தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் தனித்தனியே தமது யோசனைகளை சமர்ப்பிப்பதெனவும் அதற்கு முன்னதாக அவ் யோசனைகளை 29ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் முன்வைத்து அது தொடர்பாக ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment