தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கிய தளபதிகளின் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் அதிசயமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இறுதிப் போர் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விநாயகம் உட்பட குடும்பத்தினர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் இலங்கையில் அகதிகளுக்காக அமைக்கப்பட்ட எந்த நலன்புரி நிலையங்களிலும் விடப்படவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்தனர். இராணுவமும் அவர்கள் போரில் காணாமல் போய்விட்டனர் என்றே கூறிவந்தது.
இந்நிலையில் நேற்று இரவு விநாயகத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டம் இல்லாத பகுதியில் கடற்படையினர் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் இறக்கவிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், திருகோணமலை பகுதியில் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அங்கே 700 பேர் வரையிலான புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து சிலர் தப்பிவந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தப்பி வந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தந்தால் அவர்களை நேரடியாக சாட்சியமளிக்க வைக்க தன்னால் முடியும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment