இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதை வரவேற்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த புதிய செயற்பாடுகள், உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், நீண்டகால இனப்பிரச்சினை மற்றும் சமத்துவமின்மைக்கு அரசியல் தீர்வினைக் காண்பதற்கும் ஓர் ஆரம்பமாக அமையும் என அறிக்கையொன்றின் மூலம் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், உள்ளக நீதிமன்ற பொறிமுறை மூலம் பரந்த நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான பிரேரணை விசாரணைகளை முன்னோக்கி நகர்த்துவதுடன், அதுதொடர்பில் கண்காணிப்பதற்கும், சர்வதேசத் தலையீட்டை ஏற்படுத்துவதற்கும் முன்னோடியாக அமைந்துள்ளது என்றும் வட மாகாண முதலமைச்சரின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment