Latest News

September 28, 2015

நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் : கனடாவில் சுமந்திரன்
by Unknown - 0

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களின் முழு சம்மதத்தோடு, அவர்களை நியாயப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு நேற்று  விஜயம் செய்த சுமந்திரன், கூட்டமைப்பின் கனடா கிளை தலைமையகத்தில் இடம்பெற்ற ‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி அமெரிக்கா இலங்கை கூட்டாக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு சார்பாக இலங்கையும் கையெழுத்திட்டுள்ளதால், இவ்விசாரணை இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதெனவும், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு உள்ளதால் அதில் பொதுநலவாய நாடுகளின் நீதவான்கள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதவான்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போர்க்குற்ற விசாரணையை தனியே இலங்கை அரசாங்கத்திடம் மட்டும் கொடுத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென, பலத்த குரலில் சொல்வோம் என தாம் ஜெனீவாவில் தெரிவித்ததாக சுமந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் தொடரபில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென்றும், உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments