Latest News

September 28, 2015

நாட்டாண்மை ஆட்சி முறைமை நீக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு பூரண விடிவு கிட்டும் : வடக்கு முதல்வர்
by Unknown - 0

என்னை பலரும் எதிர்ப்பு அரசியல் வாதியென வர்ணிப்பது  நான் அறிவேன். நான் அரசியல் வாதியும் இல்லை, கட்சி சார்ந்தவனும் இல்லை, நீதித்துறையில் சில காலம் களித்த பின்னர் ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும் ,சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தேர்தலில் போட்டியிட  வைத்தார்கள். இதனால் என்நிலை மாறியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

நான் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றேன் பின்னர் எனது நிலை மாறியது. மக்களுக்கு சேவையாற்றும் வைராக்கியத்துடன் இருந்தேன்  மக்களுக்காக எவ்வாறான எதிர்ப்பும் பழிச்சொல்லும் எனக்கு நேர்ந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை.

தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.

இவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம்.ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை  உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன.

இத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மைமுறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

நீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும்.படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும்.வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments