போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் கிடைக்கின்ற உதவிகளை உச்சளவில் பயன்படுத்தி தொழில் முயற்சிகளை ஆர்வமாக மேற்கொள்வதனால்; தமது வாழ்வாதாரத்திற்கும் எமது பொருளாதாரத்திற்கும் ஒத்துழைக்க முன்வரவேண்டும். இவ்வாறு வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கான 2015 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான முலதன நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளை கையளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், எமது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குரியான நிலைமையிலேயே காணப்படுகின்றது. நாளாந்தம் எமது மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராட வேண்டியுள்ளது. நாம் இன்று பல கிராமங்களுக்கும் நிலைமைகளை அறிவதற்காகச் செல்கையில், உண்மையில் மக்களிடத்தில் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் இருக்கின்றது. எனினும் அத் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு எவ்வித முதலீட்டு மார்க்கங்களும் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைக் காண்கின்றோம்.
இவ்வாறாக ஆற்றல் இருந்தும் தொழில் முயற்சிகளில் ஈடுபட வசதியற்று இருக்கின்ற ஏராளமானவர்களில் என்னால் இயன்றளவு பயனாளிகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான தொழில் முயற்சிகளுக்காக இயன்றதைச் செய்கின்றேன்.
இதனை உரியவர்கள்; தகுந்தவாறு பயன்படுத்தினால் அவர்களது குடும்பப் பொருளாதாரமும் எமது வடமாகாணப் பொருளாதாரமும் வளர்ச்சிகாண்பதற்கு ஒத்துழைக்க முடியும். இன்று நாம் உங்களுக்கு வழங்கியது ஓர் தொழிலுக்கான முதலீடு. இது உங்களது எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்கானது.
போர்காலத்தில் கூட எம்மிடம் உணவுப் பொருட்களில் ஓர் தன்னிறைவு காணப்பட்டது. எனினும் தற்போது எல்லாவற்றுக்கும் தெற்கை நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டு வருகின்றது. ஊள்ளுரில் பலதரப்பட்ட உற்பத்திகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். எமது ஒத்தாசைகளுடன் நீங்கள் நம்பிக்கையுடனும் விருப்பத்தடனும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளுககு ஏற்றால் போல் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்மால் உதவிகள் வழங்கப்பட முடியாவிட்டாலும் ஓரளவுக்கு ஏனும் எம்மால் இயன்ற கருமங்களை ஆற்றுகின்றோம். எனவே கிடைக்கின்ற உதவிகளை எம்மவர்கள் உச்சளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
No comments
Post a Comment