Latest News

August 07, 2015

தாஜுதீன் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார் நாமல் ராஜபக்ஷ
by Unknown - 0

ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ மீது சில ஊடகங்கள் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தன.

தன் சகோதரர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, தாஜுதீன் தமது குடும்ப நண்பர் என்று தெரிவித்தார்.

வாசிம் தாஜுதீனை தன்னுடைய பள்ளிக்கூடக் காலம் முதல் அறிந்திருந்ததாகவும் இந்த மரணம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்வதை தவிர்த்து, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமற்றது என்றும் நாமல் கூறினார்.

வாசிம் தாஜுதீனின் குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய நாமல் ராஜபக்ஷ, இந்த சம்பவத்தை அரசியலாக்குவதன் எந்த நன்மையும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், வாசிம் தாஜுதீன் வாகன விபத்தொன்றினால் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இப்போது இந்த மரணம் ஒரு கொலையென்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த மரணம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகவில்லையா என்று கேட்டபோது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாமல் கூறினார்.

தேர்தல் காலகட்டத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு சேறு பூசுவதற்காக தாஜுதீனின் மரணத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் நாமல் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments