Latest News

August 31, 2015

காணாமல்போனோர் பற்றி கவிதைப் போட்டி நடத்தும் அம்னெஸ்டி!
by Unknown - 0

இலங்கையில் காணாமல்போனவர்களின் பிரச்சனை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல்- மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்கள் மத்தியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தக் கவிதைப் போட்டியை நடத்தவுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

'மௌன நிழல்கள்' என்ற இந்த தலைப்பில் நடத்தப்படும் இந்தக் கவிதைப் போட்டியின் நடுவர்கள் குழுவில் மூன்று மொழிகளையும் சேர்ந்த முன்னணி எழுத்தாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

உலகில் அதிகளவானவர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள நாடாக, இலங்கையே இருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

பல தசாப்தகால போரில் அங்கு குறைந்தது 80 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலக்கியத்துக்கும், குறிப்பாக கவிதைக்கும் சில சில முக்கியமான விடயங்களை நோக்கி மனிதர்களின் மனங்களையும் கவனத்தையும் திருப்பும் நுண்ணிய ஆற்றல் உண்டு' என்று இந்தக் கவிதைப் போட்டியின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள கவிஞர் சேரன் தெரிவித்தார்.

'மிக அடர்த்தியான இருள் இருக்கின்ற போது, ஒரு சிறிய விளக்கையாவது ஏற்றுவது ஒரு நல்ல விடயம் என்ற அடிப்படையில் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது' என்றும் கூறினார் சேரன்.

ஈழத்து எழுத்தாளரான கவிஞர் சேரன் தற்போது கனடாவில் வின்ட்ஸர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுகின்றார்.


« PREV
NEXT »

No comments