Latest News

July 06, 2015

தமிழ் மக்களின் தெரிவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
by admin - 0



 

பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார்.

தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பாளர் விடயத்தில் விட்டுக்கொடுக்க மைத்திரி தயாராக இருக்கவில்லை. அவருக்குப் பின்னால் நின்று வழி நடத்தும் இந்திய - அமெரிக்க கூட்டும் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை.

ஒரு பக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவினைப் பேணவேண்டிய கட்டாய நிலை. மறுபக்கத்தில் பாரம்பரியமாகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகைமை கொள்ளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமைதாங்க வேண்டிய நிலை. இந்த இரட்டை நிலைப்பாடு காரணமாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மைத்திரியினால் முடியவில்லை. நோர்வேயில் இருக்கும் புலம்பெயர் ஆய்வாளர் கலாநிதி சர்வேந்திரா இதனை இரட்டை விசுவாசம் என அடையாளப்படுத்துகின்றார்.

தமிழ்ப் பிரதேசங்களிலும் இந்தத் தடவை பலமுனைப் போட்டி நிலவுகின்றது. வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு போட்டி நிலை இருந்தாலும், வடகிழக்கு முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையேதான் போட்டி இருக்கின்றது. இந்த இடத்தில்தான் மக்களின் தெரிவு எதுவாக இருக்க வேண்டும் என்ற பலமான கேள்வி எழுகின்றது.

பெரிய, சிறிய போட்டியாளர்கள் அனைத்தையும் இணைத்துப் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்பன போட்டியில் பங்குபற்றுபவையாக உள்ளன. இவற்றில் தமிழ் மக்களின் தெரிவு எதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு மிகப்பெரிய விவாதப் பொருள்.

இந்த விவாதத்திற்குப் பதில் தமிழ்த்தேசிய அரசியல்தான். எந்தக் கட்சி தமிழ்த் தேசிய அரசியலை பிரக்ஞைபூர்வமாக முன்னெடுக்க முயல்கின்றதோ அதனைத்தான் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய அரசியல் என வருகின்ற போது இலக்கும், அதற்கு அடிப்படையான கொள்கைகளும், இலக்கினை நோக்கிய செயற்பாடுகளும் முக்கியமானவையாகும்.

இலக்கு என வரும்போது தமிழ்த்தேசிய அரசியலின் இலக்கு யாது? என்ற கேள்வி எழுகின்றது. இங்குதான் இனப்பிரச்சினை என்றால் என்ன? அதற்கான தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பவை பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் மக்கள் தமக்கென தனியான நிலம், தனியான பொருளாதாரம், வளமான மொழி, தனியான கலாசாரம் என்கின்ற அடையாளங்களுடன் ஒரு தமிழ்த் தேசமாக எழுச்சியடைந்துள்ளனர்.

இந்த எழுச்சியை தடுப்பதற்காகத் தமிழ் மக்களின் அடையாளங்களை, அவர்களைத் தேசமாகத் தாங்கும் தூண்களை அழிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த அழிக்கும் முயற்சிகளுக்கும் மறுபக்கத்தில் அதனைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் இடையிலான விவகாரத்தையே இனப்பிரச்சினை என்கின்றோம். இந்த இனப்பிரச்சினை தமிழ்த் தேசம் திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினையே. இனப்பிரச்சினைக்கான தீர்வு அழிவிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும்.


இந்த நிரந்தரப் பாதுகாப்பு, தேசத்தை அங்கீகரித்தல் மூலமே சாத்தியப்படும். அதிகார விவகாரம் எல்லாம் இரண்டாம் பட்சமான விடயம். தேச அங்கீகாரமே முதன்மையானது. தேச அங்கீகாரம் என்பது தனி நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாட்டுக்குள்ளேயே பரஸ்பர உடன்பாட்டுடன் தேச அங்கீகாரத்துடன் வாழலாம். தேசங்கள் இணைந்து ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலம் இவற்றைச் சாத்தியப்படுத்தலாம்.

இந்த தேச அங்கீகாரத்தைப் பெறும் அரசியலுக்கு அதனை முன்னெடுக்கின்ற அமைப்பு இந்த இலக்கில் பிரக்ஞைபூர்வமானதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்கவேண்டும். சுயாதீனம் இல்லாமல் பிரக்ஞைபூர்வ அரசியலை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது.

தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிடும் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, பிள்ளையானின் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என்பவை தமிழ்த் தேசிய அரசியலுக்கு நேரடியாகவே துரோகமிழைத்த கட்சிகள். அவற்றை மக்கள் எப்போதோ ஒதுக்கிவிட்டனர். அவற்றை விட்டுவிடுவோம். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசத்தை ஒடுக்கும் தென்னிலங்கைக் கட்சி. அதனையும் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை.

மக்களின் தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலேயேயுள்ளது. இங்குதான் மக்களுக்கு மேலே கூறியது போலத் தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய புரிதல் அவசியமாகின்றது. புலிகளினால் ஆதரிக்கப்பட்ட கட்சி என்ற வகையிலும் ஐக்கியப்பட்ட கட்சி என்ற வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய ஒரு மாயை மக்களிடம் இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டுவிட்டது. இன்று சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 13 ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொண்டமை, வடக்கு- கிழக்குப் பிரிப்பினை ஏற்றமை, சிங்கக் கொடியை ஒடுக்குமுறையாளரான ரணிலுடன் சேர்ந்து உயர்த்திப் பிடித்தமை, சுதந்திர தினத்தில் பங்குபற்றியமை, மைத்திரி அரசின் பங்காளிக் கட்சியாகி தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகித்தமை, சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டமை என அனைத்து நடவடிக்கைகளும் சிங்கள மேலாதிக்க அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியலைக் கரைக்கும் செயற்பாடுகளே.

கூட்டமைப்பின் இத்தொடர்ச்சியான செயற்பாடுகள் தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாகக் கீழிறக்குகின்றன. இந்தக் கீழிறக்குகையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்று தமிழ்த் தேசிய அரசியலை மேல் நோக்கி நகர்த்துவதல்ல பிரச்சினை. கீழ்நோக்கி செங்குத்தாக சரிந்து வீழ்வதை எவ்வாறு தடுப்பதென்பதுதான் பிரச்சினை. இதற்கான ஒரு தடுப்புக் கட்டைதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகவே இருக்க வேண்டும். இந்தத் தடுப்புக் கட்டையை உருவாக்கப்படாவிட்டால் தமிழ்த் தேசம் அழிந்து போவதை கடவுளாலும் தடுக்க முடியாது.

இந்தத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலை அழிய விடுவதா? உயிர்ப்புடன் வைத்திருப்பதா? என்பதைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகும்.

« PREV
NEXT »

No comments