தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை பார்த்து பயந்து பேச்சுவாரத்தைக்கும் தீர்வுக்கும் அன்றைய அரசு முன்வந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்த இராணுவ பலத்தை தற்போது அரசியல் பலமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் முடிய தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17 தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை பெற்றால் ஏனைய இனமும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை பெறலாம் என்றும் கூறினார்.
திருகோணமலை சேருவில தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இரா சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
அதிகபடியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் இனப்பிரச்சினைக்கு இன்றியமையாத பேரம் பேசும் சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
1994இல் சந்திரிக்கா தமிழ் மக்களுக்காக தீர்வுப் பொதியொன்றை கொண்டுவந்தபோது அதற்கு மைத்திரிபால சிறிசேன பக்கபலமாக இருந்தவர் என்றும் அவரை தான் நீண்டகாலமாக அறிந்திருப்பதாகவும் சம்பந்தர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதில் மைத்திரிபால சிறிசேன உறுதியானவர் என்றும் சம்பந்தர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேன மகாத்மா காந்தி, பிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற பெரியார்களின் வழியில் பயணிப்பவர் என்றும் இரா. சம்பந்தர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment