தமிழர் பிரச்சினைத் தீர்வுக்காய்
உழைக்க மக்கள் ஆணை தருக
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை இலங்கை அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் சென்று தீர்வைக் காண நாடாளுமன்றத் தேர்தல் மூலம் ஆணை தருமாறு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாகப் பலம்பெறும்போதே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை இலங்கை அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் சென்று தீர்வைக் காண முடியும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நேற்று யாழ்.செயலகத்தில் தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வட, கிழக்கில் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது. அதற்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளோம். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய ஒத்துழைப்புடன் பெரும்பான்மை வெற்றியை தமிழ்க் கூட்டமைப்புப் பெறும் என்ற் நம்பிக்கை எமக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.
இவ்வாறான வெற்றியின் ஊடாகவே நீண்டகால இனப்பிரச்சினை, வட,கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வுகளைக் காண முடியும்.
கடந்த 5 வருடங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நில சுவீகரிப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்தும் காணாமல போனவர்களுடைய பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலையை வலியுறுத்தியும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்தோம்.
அத்தகைய அழுத்தங்களினால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த அளவு நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலதிகமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் சிலர் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பியிருக்கின்றார்கள் எனவும் மாவை சுட்டிக்காட்டினார்.
மேலும் 2009ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த மனிதவுரிமை மீறல்கள் யுத்தக்ட குற்றங்களுக்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் குரலாக சர்வதேச மட்டத்தில் ஒலித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய பணிகள் தொடர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment