Latest News

July 09, 2015

ராமேஸ்வரம் - இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை- ரூ.22,000 கோடியில் மத்திய அரசு புதிய திட்டம்
by Unknown - 0

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது.

டெல்லியில், சாலை போக்குவரத்து தொடர்பாக நேற்று நடந்த மாநாட்டில், மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். மாநாட்டுக்குப் பிறகு நிதின் கட்கரி கூறியதாவது.. அண்டை நாடுகளுடன், வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த, போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழகத்தின், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக, 22,000 கோடி ரூபாய் அளிக்க, ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலை, 22 கி.மீ., துாரத்துக்கு அமையலாம். கடலுக்கு மேல் பாலம் அமைத்தும், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும், இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் மூலமாக, 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இலக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்படும். சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில், ஏற்கனவே, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார். கடலுக்கு அடியில் "டன்னல்"...,இயலுமா? ஜப்பானில், கடலுக்கு அடியில், "டன்னல்" எனப்படும் 53 கி.மீ., துாரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே, கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள நீளமான சுரங்கப்பாதை இது தான். பிரிட்டனின் போல்ஸ்டோன் நகரிலிருந்து பிரான்சின் கிளாசிஸ் நகருக்கு, கடலுக்கு அடியில், 50 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து, ரயில் போக்குவரத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அட்லாண்டிக் கடல் பகுதியில், ஆங்கில கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை, உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, கடலுக்கு அடியில் சுரங்கப் பாதை அமைத்து, அதில் சாலை போக்குவரத்தை துவக்குவது சாத்தியமே என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை, முன்பு, 'போட்மெயில்' என்ற ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில், சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும். அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். சென்னையிலிருந்து கொழும்பு வரை, ஒரே டிக்கெட்டில் பயணம் செய்வது தான், இதில் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான பயண அனுபவத்தை தந்த இந்த, போட் மெயில் சேவை, 1964ல், தனுஷ்கோடியை புரட்டிப் போட்ட புயல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, கடல் வழியாக சாலை அமைக்கும் திட்டத்தை துவக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
« PREV
NEXT »

No comments