Latest News

July 18, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி-இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!
by Unknown - 0

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சில நிபந்தனைகளின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இணைந்து போட்டியிடுவதாக மலையகத்தில் பிரதான அரசியல் கட்சியாக கருதப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இ.தொ.கா. பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது மலையக மக்களின் கல்வி , வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மையமாக கொண்டு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டபோது, சாதகமான பதில் கிடைத்துள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரான ஆறுமுகம் தொண்டமான் கூறுகின்றார்.

இந்த சந்திப்பு தொடர்பாக கொட்டகலை இ.தொ.கா. தலைமையத்தில் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆறுமுகம் தொண்டமானால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்குதல், ஊவா மாகாணத்தில் ஆசிரியர் கல்வியல் கல்லூரி ஆரம்பித்தல், மேலும் தோட்டப் பாடசாலைகளுக்கு மூவாயிரம் ஆசிரியர் உதவியாளர்களை நியமனம் செய்தல், தோட்ட இளைஞர் யுவதிகளை கிராம சேவை அலுவலகர்களாக நியமித்தல் என கல்வி மற்றும் தொழில் சார்ந்த கோரிக்கைளும் இந்த நிபந்தனைகளாக அமைவதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

தோட்ட லயன்களை கிராமங்களாக மாற்றியமைத்தல், கைவிடப்பட்டு தரிசு நிலங்களாக காணப்படும் தேயிலை தோட்டங்களை தேயிலை சிறு தோட்டச் செய்கைக்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்தல் போன்ற மலையக மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையிலான கோரிக்கைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார்.

தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகள் ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் கொள்கை விளக்கத்தில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையின்றி ஐ. ம. சு. முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்விற்கு ஆதரவு வழங்கியது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்குவது என்பது சாத்தியப்படாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
« PREV
NEXT »

No comments