இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தான் ஆதரிக்கவில்லை என்று தற்போதைய ஜனாதிபதியும் அந்த முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவி என்று வரும்போது மஹிந்த ராஜபக்ஷவைவிட மூத்தவர்கள் பல முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற மாட்டார் எனவும் அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.
தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் இல்லையென்றும், முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்முறை காரணமாகவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டின் ஜனாதிபதியாக தான் பதவியேற்ற பிறகு தொடர்ச்சியாக பல அவமானங்களை சந்தித்து வருவதாகவும், முன்னர் இருந்த ஜனாதிபதிகள் யாருக்கும் அப்படியொரு நிலை ஏற்படவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்துக்கள் குறித்து தாங்கள் மிகவும் மனம் வருந்துவதாகவும் அது, தம் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஜானக பண்டார தென்னக்கோன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து விவாதிக்க தமது கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment