நாட்டில் இனவாதத்தைக் ஏற்படுத்தி இனவாதக் குப்பையில் மக்களைத் தள்ளி அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையிலையே முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் அமைகின்றன.
இதனூடாக மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிக்கின்ற அவரின் செயற்பாடுகளிற்கு இடமளிக்காது அதனைத் தடுக்கும் வகையிலையே ஐனநாயகத்தை விரும்புகின்ற அனைவரதும் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஐபக்ச போட்டியிடுகின்ற குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுபவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன் கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஐபக்ச போட்டியிடுகின்ற குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவின் சார்பில் நானும் போட்டியிடுகின்றேன். இங்கு நான் போட்டியிடுவது தொடர்பில் தற்போது பலரும் பல கதைகளைக் கூறி வருகின்றனர்.
ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்து இன்று ஐ.நாவிலேயே கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்ற கொலையாளிக்கு ஈழத்தமிழர்கள் சார்பிலான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலையே நாம் அங்கு சுயேட்சையாக போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ளோம்.
இத் தேர்தலில் போட்டியிடுகின்ற போதும் அங்கு பிரச்சாரங்களைச் செய்யப் போவதில்லை. கூட்டங்களை நடத்தப் போவதுமில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் இல்லை. இதற்கு மேலாக அங்கு இவ்வாறு செயற்படுவதற்குரிய பாதுகாப்பும் இல்லாத நிலையே இருக்கின்றது.
இங்கு நான் போட்டியிடுவதால் மகிந்தவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் இங்கு வந்து ஏன் போட்டியிடுகின்றீர்கள் என்றும் என்னிட்டம் ஊடகங்கள் சில கேள்வியெழுப்பியிருக்கின்றன.
அம்பாந்தோட்டையிலிருந்து குருநாகலிற்கு வந்து மகிந்த ராஐபக்ச போட்டியிடலாம் என்றால் யாழ்ப்பாணத்திலிருந்து சிவாஜிலிங்கம் வந்து ஏன் குருநாகலில் போட்டியிடக் கூடாது.
அத்தோடு நாம் இங்கு போட்டியிடுவதால் மகிந்தவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்குது குறையுது என்பது முக்கியமல்ல.
மகிந்தவிற்கு எதிரான எமது நிலைப்பாட்டை நாம் இதனூடாகவும் வெளிப்படுத்துகின்றோம்.. இதனைவிடுத்து இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிச் செல்வதும் நோக்கமல்ல.
எமது கொள்கை அடிப்படையிலையே போட்டியிடுகின்றோம் என்பதனை முதலில் அனைவரும் விள்ஙகி கொள்ள வேண்டும்.
இந்த மாவட்டத்திலிருந்தே அதிகளவிலானோர் படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இங்கு தான் மகிந்தவின் இனவாதக் கருத்தும் போர் வெற்றியும் இலகுவில் வெளிப்படுத்த முடியும் அதனூடாக மக்களிடம் அமோக வாக்கைப் பெற்று தனது பலத்தை நிருபித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே மகிந்த குருநாகலில் போட்டியிடுகின்றார்.
இதனாலேயே முன்னாள் இரானுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்சலாகப் பதவி வழங்கப்பட்டிருப்பவருமான மேஐர் ஐனரல் சரத் பொன்சேகாவை மகிந்த போட்டியிடும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட வைப்பதற்கு பல முயற்கிள் முன்னெடுக்கப்பட்ட போதும் தேர்தல் விதி முறைகள் காரணமாக அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இங்கிருந்து மகிந்த மீண்டும் மீண்டும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதுடன் இனவாத்தைக் கிளப்பும் வகையில் தன்னுடையதும் தனது சகாக்களினுடையதூமான
செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளார்.
இவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் மீண்டும் விதைக்கப்படுகின்ற இனவாதத்திற்கு மக்கள் அடிபணியாது சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகும். கடந்த ஐனாதிபதித் தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட்டு மகிந்த ராஐபக்சவை வீட்டிற்கு அனுப்பியது போன்று இத் தேர்தலிலும் சிந்தித்துச் செயற்பட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இனப்பிரச்சனைக்கான தீர்வு எதனையும் முன்வைக்காமலேயே ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி காலத்தைக் கடத்தி வருவதாக முன்னாள் அமைச்சரும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்வைத்த கருத்தை நிராகரித்திருக்க்கின்றார்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த 19 ஆண்டுகாலமாக ஆட்சிக்கு வருகின்ற அரசில் அமைச்சராக இருந்த போது மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றார் என்பதனை முதலில் வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தீர்வு இல்லை என ஈடிபிடியின் செயலாளர் நாயகம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இத்தனை காலமும் இருட்டு அறைக்குள் இருந்து கறுப்புப் பூனையைத் தேடிக் கொண்டு இருந்தவர் தான் டக்ளஸ் தேவானந்தா. இன்று வெளியில் வந்து பார்க்கும் போது அவரே தன்னைப் பற்றி புரிந்து கொண்டிருக்கின்றார் போல. இதனை அவருடைய பேச்சிலிருந்தே அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான ஒருவர் தமிழ் மக்களின் பிரச்சனைக் கூட்டமைப்பிடம் தீர்வு இல்லையாம் என்று கூறுகின்றார். நாம் எமக்கான தீர்வு எனன என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றோம்.
இதனையே கடந்த அரசாங்கத்துடனான 18 சுற்றுப் பேச்சுக்களின் போதும் கூட தீர்வுத் திட்டமாக முன்வைத்துள்ளோம்.
அதாவது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் சமஷ்டியைத் தான் நாம் கோரி வருகின்றோம். இதனையே நாம் கோரி வருகின்ற போதும் காலம் காலமாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்ககங்கள் அதனை தர மறுத்து வருகின்றன. இதன் போது அரசிற்கு உடந்தையாக ஈபிடிபி இருந்து வருகின்றது.
அவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்குத் ஈபிடிபி தீர்வைக் கோரா விட்டாலும் பரவாயில்லை தீர்வை நாம் கோருகின்ற போதும் குழப்பாமல் இருப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். இதனைவிடுத்து எம்மீது குற்றங்களைச் சுமத்தாமல் இதுவரை காலமும் மக்களுக்கு என்னதைச் செய்துள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக 1994 ஆம் ஆண்டு முதல் 2014 அம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களிலில் மாறி மாறி அமைச்சராகவும் அத்தோடு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்து விட்டு மக்களுக்கான தீர்வு என்ன என்று தற்பொது யாரைப் பார்த்துக் கேட்கின்றனர்.
எனவே தேர்தல் காங்களில் மக்களை ஏமாற்றாது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஏம் மீது குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு பதிலாக மக்களுக்கு செய்ய வேண்டி இருந்தால் அதனைச் செய்து கொடுப்பதுடன் ஏனையவற்றையும் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது போன்று இத் தேர்தலில் டக்ளசிற்கும் நல்ல பாடத்தைப் புகட்டி அவரையும்; வீட்டிக்கு அனுப்பி அவருக்கு ஓய்வளிக்க வேண்டும். என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

No comments
Post a Comment