கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் மன்றம் முன்னெடுக்கும் முத்தமிழ் விழா இன்றும் நாளையும் கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கலாசலையின் பிரதி அதிபர் ச.லலீசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று காலை 8.30 மணிக்கு கலாசலையின் பி; ச.லலீசன் தலைமையில் நாடகவிழா ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக ஓய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரனும் யாழ். பல்கலைக்கழக கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும் கலந்து கொள்வர்.
நிகழ்வில் கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கத்தின் ஆசியுரை மன்ற உபகாப்பாளர் எஸ்.ஜெயக்குமாரியின் தொடக்கவுரை என்பவற்றைத் தொடர்ந்து நாடக அளிக்கைகள் இடம்பெறும். சிட்டுக்குருவி, சூரியன் நிலவாக, யாரொடு நோகேன், அகல்விளக்கு ஆகிய நாடகங்கள் போட்டி அடிப்படையில் மேடையேறவுள்ளன.
முதலாம் நாள் நிறைவு நிகழ்வாக காத்தவராயன் சிந்துநடைக் கூத்து இடம்பெறவுள்ளது. அத்துடன் கலாசாலை ஆசிரிய பயிலுநர்களின் தயாரிப்பாக அமைந்த வற்றுப்பெருக்கு, திருப்பம் குறும்படங்கள் வெளியிடப்பட்டுத் திரையிடப்படும்.
இரண்டாம்நாள் நிகழ்வுகள் நாளை (16.07.2015) காலை 8.30 மணிக்கு பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் ஓய்வுநிலைப் பிரதி அதிபர் கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு இனிய விருந்தினராகவும் கலந்து கொள்வர்.
நிகழ்வில் கலாசாலை உப அதிபர் த.கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் குழுமத் தலைவர் வி.எஸ்.குணசீலன் ஆகியோரது வாழ்த்துரைகளும் முத்தமிழ் மன்றக் காப்பாளர் அ.பௌநந்தியின் தொடக்கவுரையும் முத்தமிழ் மன்றத் தலைவர் கு.உதயபாஸ்கரனின் வரவேற்புரையும் இடம்பெறும்.
முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட இயல் இசைத்துறை சார்ந்த நிகழ்வுகளில் முதன்மை இடம்பெற்றோரின் ஆற்றுகைகள் மற்றும் தாருகாவன முனிவர்கள் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம், பாஞ்சாலி சபதம் என்ற பொருளில் அமைந்த நாட்டுக் கூத்து என்பனவும் இடம்பெறவுள்ளன. முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட இயல் இசை நாடகம் சார்ந்த போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

No comments
Post a Comment