தமிழ்த் தேசியத்துக்கும், தமிழர் தம் நீண்ட கால அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஒரு சத்தியசோதனையாகவே நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நடைபெறப்போகும் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினைத் தக்க வைப்பதற்கான தேர்தலாகவோ அல்லது போட்டியிடும் என் போன்ற வேட்பாளர்களின் வெற்றியினை மையமாகக் கொண்ட தேர்தலாகவோ நான் நோக்கவில்லை,
அவ்வாறு நோக்கவும் முடியாது, மாறாக தமிழர் தம் நீண்ட கால அரசியல் போராட்ட வரலாற்றில் குறிப்பாக அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், திருப்பங்கள் அவற்றின் எதிர்விளைவால் எம் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத துன்பியல் நிகழ்வுகள் அனைத்துக்கும் ஓர் சரியான தீர்க்கமான,
எம்மக்களால் ஏற்றுக் கொள்ளத் தக்கதான தீர்வினை முன்வைக்கக் கூடிய ஆத்ம பலத்தினை எம்மக்களிடம் இருந்து பெறுவதற்கான அதுவும் தமிழ்த் தேசியத்தின் ஏக குரலாக என்றும் ஒலிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ்த் தேசிய வாழ் மக்கள் வழங்கும் ஆணையாகவே இத் தேர்தலை நான் காணுகின்றேன்,எதிர்நோக்குகின்றேன்.
இலங்கையின் இன்றைய அரசியல் களநிலைமை எம்மையும் எமது மக்களையும் சரியான தெளிவான பாதையினை தெரிவு செய்ய வேண்டிய நாற்சந்தியில் நிறுத்தியுள்ளது. இந்நிலைமையில் சரியாக வழிகாட்ட வேண்டிய ஒரு பக்கப் பொறுப்பு எம்மிடமும், சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய மறுபக்கப் பொறுப்பு எம் மக்களிடமும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட இரு தரப்பும் தமிழ்த் தேசியத்திற்காக தமது வரலாற்றுக் கடமையைச் செய்வதற்காக தமிழ்த் தேசியத்துடன் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத் தேர்தல் வெறுமனே மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் முயற்சி அல்ல.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்தும் அது உள்ளூராட்சித் தேர்தலோ, மகாணசபைத் தேர்தலோ,நாடாளுமன்ற தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ அது நடந்த கால தேச, வர்த்தமானச் சூழல் பொறுத்து ஏதோ ஒரு செய்தியை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துக் கூறவேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்தியே உள்ளது.
அதுபோலவே இத்தேர்தலும் எமது ஒற்றுமையின் சக்தியினை உள்நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் உரத்துக் கூறவேண்டிய காலத்தின் கட்டாயத் தேவையுள்ளது.
வெறுமனே விமர்சகர்களாக இருந்து குறைகாண்பதில் நிறைகாண்பவர்களாக மட்டும் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளும் ஒரு சிலர் தவிர்ந்த எமது மக்கள் அனைவரும் காலத்தின் கட்டாய தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியத்தின் உரமாக மாறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இத்தேர்தலை நானும் எனது குழுவினரும் எதிர்கொள்கின்றோம் என தெரிவித்தார்.
No comments
Post a Comment