Latest News

July 30, 2015

அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்?
by admin - 0

அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? யாழ் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் வாதப் பிரதி வாதம்


யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வாதப்பிரதிவாதம் எழுந்தது. நீண்ட விவாததத்தின் பின்னர், திருமணத்தின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாலியும் கொடியும் விவாகரத்து பெற்ற பெண்ணுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான கனகா சிவபாதசுந்தரம், மா.இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டு வழக்கில், 29 ஆம் திகதி புதன்கிழமை நீதிபதி கனகா சிவபாதசுந்தரத்தின் உடன்பாட்டுடன் நீதிபதி இளங்செழியன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த விவாகரத்து வழக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, விவகாரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
அதேநேரம் திருமணத்தின் போது கட்டப்பட்ட தாலிக்கொடி சம்பந்தமாக எழுந்த விவகாரத்தில், தாலி மட்டுமே மனைவிக்கு சொந்தம் எனவும், அதனை வைத்துக் கொண்டு, கொடியை கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக எழுந்த வாதப் பிரதி வாதங்களையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில் சிறு பகுதியை நீக்கிவிட்டு. அந்தத் தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மேல் நீதிமன்ற நீதிபதிகளான கனகா சிவபாதசுந்தரம் மற்றும் மா.இளஞ்செழியன் ஆகியோர் ஏகமனதாக வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில், நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:

இந்து. தமிழ் சமயாசார திருமணத்தின் அடிப்படையில் தாலி கட்டி திருமணம் செய்வது வழக்காற்று திருமணமாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது என்பதற்கான ஒரு சாட்சியாகவும் சான்றாகவுமே தாலி கருதப்படுகின்றது. தாலியும் கொடியும இணைந்தது. தாலியை அணிகின்ற கொடி என்பது ஒரு சொத்து அல்ல. அது காலாசார, பண்பாடு பெறுமதியைக் கொண்டது. அதன் பெறுமதி அளவிட முடியாதது. எனவே, தாலியையும் கொடியையும் இரண்டாகப் பிரிக்க முடியாது.
மிக முக்கியமாக நிறைவேற்றப்படுகின்ற திருமணத்தை உறுதி;ப்படுத்துவதற்காகவே திருமணத்தில் தாலி கட்டப்படுகின்றது. இது தாலித் திருமணமாகும். மஞ்சள் கயிற்றில் மூன்று முடிச்சு போடுவது ஒருவகை தாலித்திருமணமாகும். ஆனால் யாழ்ப்பாணம் இந்து தமிழர் கலாச்சாரம் தங்க நகையில் தாலி கட்டுவதாகும். எனவே தாலி வேறு தாலிக்கொடி வேறு என பிரிக்க முடியாது.

விவாகரத்தின் பின்னரும் தாலியும், தாலிக்கொடியும் மனைவியிடமே இருக்க வேண்டும். அதனை விவாகரத்து பெற்ற கணவன் உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் யாழ் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த, தாலிக்கொடி கணவனுக்கே சொந்தம் என்பதை ரத்துச் செய்தார்.


நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:
இந்தத் திருமணத்தின்போது சீதனமாக கணவனுக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபாவை, கணவன் மனைவியிடம் திருப்பிச் செலுத்த வேண்டும். திருமணத்தின் பின்னர் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியினால், கணவனுக்கு சீதனம் வழங்கப்படுகின்றது, இங்கு விவாகரத்தின் மூலம் இந்தத் திருமணம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மனைவிக்கு சொந்தமான அந்த 15 லட்சம் ரூபா சீதனப் பணத்தை, கணவன், மனைவிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்தத் திருமணத்தில் தாலிகட்டும்போது மேலதிகமாக கணவன் பரிசாக அளித்திருந்த முத்துச் சங்கிலி கணவனின் முதுச சொத்தாகும். எனவே, அந்தச் சங்கிலிலய, மனைவி கணவனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மேலும் திருமணம் செய்து இடையில் விவாகரத்து ஏற்பட்ட படியால் மனைவி நிம்மதியாக பிரிந்து வாழ வேண்டும் என்பதற்காக கணவன் மனைவிக்கு நிரந்தர பிரிமனை பணமாக ஒன்றரை லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்தத்; திருமணத்தின் பின்னர் பிறந்துள்ள ஆண்குழந்தை தாயிடமே வளர்ந்து வருகின்றது. கணவன் அதுசம்பந்தமாக ஆட்சேபணை தெரிவிக்காததனால், அந்தக் குழந்தையின் பாதுகாப்பும் பராமரிப்பும் தாயிடம் ஒப்படைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

« PREV
NEXT »

No comments