Latest News

July 30, 2015

பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன்!
by அகலினியன் - 0

பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன்!

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேன். இவருக்கு நாக்பூர் சிறையில் வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்று அவருக்கு 53வது பிறந்த நாளாகும்.

1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு மும்பை தடா கோர்ட் மரண தண்டனை விதித்தது. மும்பை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அத்தண்டனையை உறுதி செய்தன. ஜனாதிபதியும் அவரது கருணை மனுவை நிராகரித்தார்.

யாகூப் மேமன் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு கடந்த 21ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன்மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோரின் மாறுபட்ட நிலைபாட்டினால், 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் தடா கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி செய்ததும் யாகூப் மேமன் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகவில்லை என்றும் கூறினர். எனவே இந்த திருத்தம் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்,

யாகூப் மேமன், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தாக்கல் செய்த கருணை மனுவும் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து,  யாகூப் மேமன் சார்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்தார்.

ஜனாதிபதி அனுப்பி வைத்த யாகூப் மேமனின் கருணை மனு குறித்து மத்திய உள்துறை செயலாளர் எல்.சி.கோயலும், மத்திய சட்ட செயலாளர் பி.கே.மல்கோத்ராவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.




« PREV
NEXT »

No comments