தனது காரை எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓவர் டேக் செய்ததால் கடுப்பாகிப் போன சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த எருமை மாடுகளை கீழே இறக்கி வெளியேற்றி தனது டென்ஷனைக் காட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கோபக்கார எம்.எல்.ஏவின் பெயர் ராஜ்குமார் யாதவ். ராஜஸ்தான் மாநிலம் சாதர் என்ற தொகுதியைச் சேர்ந்தவர். சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் சம்பவத்தன்று கோட்டா என்ற கிராமத்தின் வழியாக தனது காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு எருமை மாடுகளை ஏற்றிய லாரி அவரது காரை ஓவர் டேக் செய்து வேகமாக சென்றது. இதைப் பார்த்த எம்.எல்.ஏ கோமடைந்தார். அந்த லாரியை துரத்திச் சென்று மடக்கி நிறுத்தினார். பின்னர் கோபத்துடன் சத்தம் போட்டபடி லாரியிலிருந்த எருமை மாடுகளை கீழே பத்தி விட்டார்.
விடுவிக்கப்பட்ட எருமைகள் வேகமாக ஓடத் தொடங்கின. இதைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அந்த எருமை மாடுகளை தங்களது வீடுகளுக்குக் கூட்டிச் சென்றனர். தகவல் அறிந்ததும் மாடுகளின் உரிமையாளர்கள் ஓடி வந்தனர். போலீஸாரிடம் முறையிட்டனர். இந்த நிலையில் எம்.எல்.ஏ காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த எருமைகளை கொல்வதற்காக கூட்டிச் செல்வதாக அவர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் விரட்டி விடப்பட்ட எருமை மாடுகளை திரும்பப் பெறும் முயற்சியில் போலீஸார் இறங்கினர்.
வீடு வீடாகச் சென்று தயவு செய்து மாட்டைப் பிடித்து வந்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கிராமவாசிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதன் விளைவாக விரட்டி விடப்பட்ட 30 எருமைகளும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் எம்.எல்.ஏவைச் சந்தித்த மாடுகளின் உரிமையாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகினார்கள். தங்களது மாடுகள் அருகில் உள்ள பால் பண்ணைக்குத்தான் போய்க் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள். பின்னர் சமரசம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments
Post a Comment