முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஆபத்து என தவறான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கு யார் பொறுப்பு? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதியமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகங்களில் செய்திகள் வந்தவுடன், முதல் அமைச்சர் அம்மா இதுபற்றி என்னிடமும் அரசு உயரதிகாரி களிடமும் விவாதித்தார்கள். அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலைத் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதலமைச்சர் அம்மாவிடமும் எடுத்துச் சொல்லப்பட்டது.
அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு, பத்தி 4.4இல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும், அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது" என்று விளக்கியிருக்கிறார்.
மத்திய நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வு அறிக்கையில் உள்ள இந்தச் செய்திகளைத் தேடி எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் இணைப்பதற்கு என்ன காரணம்? மத்திய உளவுப் பிரிவின் அந்தத் தகவல்களை தமிழக அரசு நம்பிய காரணத்தால்தானே, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலே அது இணைக்கப்பட்டது! மேலும் உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி தாக்கல் செய்த மனு பற்றியோ, அத்துடன் சேர்க்கப்பட்டுள்ள இணைப்புகள் பற்றியோ முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதும், தற்போது தான் அமைச்சரையும் உயர் அதிகாரிகளையும் அழைத்து முதலமைச்சர் அது பற்றி கலந்துரையாடியிருக்கிறார் என்பதும் நிதியமைச்சரின் அறிக்கையிலே இருந்தே தெளிவாகிறது.
முல்லைப் பெரியாறு போன்ற முக்கியமான பிரச்சினையில் முதல் அமைச்சருக்கே தெரியாமல், தமிழக அரசின் கருத்துகள் தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்பது எவ்வாறு சரியாகும்? முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் தமிழக அரசின் சார்பில் வேறு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளனவோ? நுண்ணறிவுப் பிரிவின் 4.4இல் உள்ள குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை புதிய மனுவிலே குறிப்பிடும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவே, கூறியிருப்பதாகவும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே கூறுகிறார்.
அப்படியென்றால், முதலில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறு நடந்துள்ளது என்பதை முதலமைச்சரே ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம். மிகப் பெரிய இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு? துறையின் அமைச்சரான பன்னீர் செல்வம் தானே பொறுப்பு! தவறு ஏன், எப்படி நேர்ந்தது என்பதற்கான விளக்கத்தை அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டுமே தவிர, எப்போதோ நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் குறிப்பிட்டு.
அதற்குப் பல முறை விளக்கங்களும், பதில்களும் அளிக்கப்பட்ட பிறகும் அதையே பிடித்துக் கொண்டு தொங்கப் பார்ப்பதும், சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்ள நினைப்பதும் நல்லதல்ல! உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தவறான அறிக்கைக்கு யார் பொறுப்பு? முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒப்புதல் பெறாமல் உச்ச நீதி மன்றத்திலே முக்கிய மனுவினை தாக்கல் செய்ததற்கு யார் காரணம்? இதற்கான விளக்கம் தான் தேவை!' இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments
Post a Comment