நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறினால் எந்த தயவு பேதமின்றி கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெட்ரிக் யூ.கே வூல்ட்டர் பொதுச் சொத்துக்கலினை தேர்தல் காலங்களில் அவதூறு செய்தாலும் அல்லது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினாலும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல்; ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும்; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்;..
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் யாழ்ப்பாணத்தில் சிறந்த முறையில் நடை பெறுவதற்கு யாழ்ப்பாண பொலிசாராகிய நாம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், வன்முறை சம்ப்வங்களினை இனங்கண்டு நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
இதற்கு யாழில் உள்ள அனைத்து மக்களும் பொலிசாருக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புக்களினையும் வழங்க முன்வரல் வேண்டும். குறிப்பாக சட்டத்தை மீறும் நபர்களை பொலிசாருக்கு இனங்காட்டி அவர்களை கைது செய்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மற்றும் குற்றங்கள் நடைபெறும் இடங்களை பொலிசாருக்கு உடனடியாக அறிய தரவேண்டும்.
தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் சட்டத்தை மீறுகின்ற அனைத்து விதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் எந்த தயவு பேதமும் இன்றியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பொலிசாரின் அறிவுறுத்தல்களை மீறினால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டத்தை மீறுபவர்கள் ஒருசிலராக இருக்கின்ற போதிலும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் பலராக இருக்கின்றனர். இந்த நிலையில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, தேர்தல் காலங்களில் வெளியே நடமாட முடியாதவாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பில் அனைத்து பொது மக்களும் அறிந்திருப்பது நல்லதாகும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழில் பொது மக்கள் சுதந்திரமான, பாதுகாப்பான முறையில் வாக்களிப்பதற்கும் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளினையும் நாம் ஏற்கனவே முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கலின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் யாழ்.பொலிஸாராகிய நாம் முழுமையான பாதுகாப்பினை வழங்கியிருந்தோம்.
அனுமதியின்றிய கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது தவிர அரச பேரூந்துகள் புகையிரத வண்டிகள் அரச நிறுவனங்களின் சுவர்களில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிளைப்படுத்தப்படுவார்கள் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments
Post a Comment