தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகளினால் நாம் அதிருப்தி அடைந்துள்ளோம். காலத்தின் கட்டாயத்திற்கு அமையவும், மக்களுக்கு உண்மையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் சுயேட்சையாக போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படுத்தி மகிந்த ராஜபக்வின் ஆட்சியை மாற்றி சரித்திரம் படைத்த தமிழ்ப் பேசும்மக்கள், எமது மண்ணிலும் அரசியல் தலைமைகளின் தரத்திலும், சிந்தனையிலும் மாற்றம் ஏற்படுத்தவேண்டிய நேரமிது.
வெறும் பதவிகளை மட்டும் தக்க வைக்கும் நோக்கில் செயற்படும் வியாபார அரசியல் தலைமைகள் ஒருபுறம்: நிதானமான அரசியல் தலைமையைத் தரத்தவறி அறிக்கை அரசியல் நடத்தும் தலைமை இன்னொருபுறம். இவர்கள் மத்தியில் புதியதோர் மாற்றம் வேண்டியே எமது அணி தனித்து சுயேட்சையாகப் போட்டியிடுகிறது.
நீண்ட அறிக்கை அரசியலில் நாம் எதைக் கண்டோம்? அன்றி உணர்ச்சியூட்டும் கூட்டமைப்புத் தலைவர்களின் வெற்று வீராவேசப் பேச்சு உங்களுக்கு எதையாவது பெற்றுத்தந்ததா? போராளிகள் பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் சுயநல தேர்தல் அரசியலுக்கென்றே ஆகிவிட்டது! மக்களின் இன்றைய உள்ளக் குமுறல்கள் இவைதான். தேர்தல் வேட்பாளர்கள் தெரிவில் நடந்த குளறுபடிகளை மக்கள், தமிழ் தலைமைகளின் தந்திர அரசியலை, நன்கு இனம் கண்டுகொண்டுள்ளார்கள். அர்ப்பணிப்பும், மக்கள் சேவைகளையும் கருத்தில் கொண்டவர்களை கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை. சமூக ஆர்வம் உள்ளவர்கள் ஓரம் கட்டப்படுவதோடு, நேர்மை, திறமை அற்றவர்களே இன்று கட்சிகளில் குடிகொண்டுள்ளார்கள். எங்கும் இதுதான் நிலைமை!
தமிழ்த் தலைமைகள் சொல்ல மறுக்கும் உண்மைகளை உங்களிடம் வெளிப்படையாக பகிரந்து கொள்வோம். யதார்த்த அரசியலுக்கு வலுச்சேர்ப்பதுடன், விதண்டாவாத அரசியலுக்கு விடை கொடுப்போம். மக்கள் தொண்டில் ஆர்வமுள்ளவர்களை முன்நிறுத்துவதுடன் நிற்காது, வெறும் வருமானத்துக்காகவும், பகட்டிற்காகவும் அரசியல் செய்யும் வீணர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்டி வைப்போம். இவை எமது தலையாய சமூக கடமை என்பதை உணர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
வீ. ஆ. ஜெயசங்கரி
முதன்மை வேட்பாளர்
சுயேட்சைக் குழு – 5.

No comments
Post a Comment