Latest News

June 05, 2015

இனப் படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியும்-சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்போ அல்ல
by Unknown - 0

இனப் படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியும். சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரோ அல்லவென் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் 67 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு இலங்கை அரசுகள் தீர்வெதனையும் தரவில்லை. 

இந்நிலையில் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுக்களினை இலங்கை அரசு நிராகரித்துவருவதுடன் சர்வதேச தரப்புக்களது நிதியில் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புக்கள் சிலவற்றை முன்வைத்து எமது கோரிக்கைகளினை பலவீனப்படுத்த முற்பட்டுள்ளது.

அந்த வகையில் புலம்பெயர் தேசங்களிலுள்ள பலவீனமான ஜிரிஎவ் அமைப்பினை சேர்ந்த சுரேன் சுரேந்திரன் போன்ற சிலரையும் கூட்டமைப்பில் பேரம் பேசி திரியும் சிலநபர்களை கொண்டும் குறித்த அரசசர்பற்ற அமைப்புக்களின் ஊடாக அதிகார பரவலாக்கல் எனும் புதுநாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

ஆனால் கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் இத்தகைய தரகர்களது தரகுவேலைகளை ஏற்றுக் கொள்ளமாட்டாதென்பதை தெளிவுபடுத்தவதுடன் இனப்படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியுமென்பதை உறுதிபட கூறி வைக்கவிரும்புகின்றது.

நோர்வே மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுக்களிற்கு என்ன நடந்ததென்பது பற்றியும் அரசு அதனை எவ்வாறு நிரகரித்தது என்பது பற்றியும் அனைவருக்குமே தெரியும். இப்போது எந்த முகாந்திரமுமற்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் ஊடாக தமிழ் மக்களது பிரச்சினைகளிற்கு அதிகாரபகிர்வு எனக்கூறப்படுவது ஏமாற்று வேலையென்பது அம்பலமாக்கப்பட வேண்டும். ஏற்கனவெ சிங்கப்பூரில் நடந்த பேச்சுக்கள் இப்போது வரை தொடர்கின்றது.தரகர்கள் ஒடியாடி அரைகுறை வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் கேட்பது இலட்சக்கணக்கான இறந்த மக்களதும் ,ஜம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களதும் ,நாலாயிரத்திற்கும் மேற்பட்ட தியாகிகளதும் தியாகங்களிற்கான கௌரவத்தையே எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டின் பின்னர் உரும்பிராயிலுள்ள தியாகி சிவகுமாரன் நினைவு தூபி பகுதியில் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் மலரஞ்சலி செலுத்தியிருந்தார். அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பிரசன்னமாகியிருந்தார். 

« PREV
NEXT »

No comments