Latest News

June 05, 2015

மியான்மார் ரொஹிங்கா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !
by Unknown - 0

மியான்மார் குடிமக்களாகிய ரொகிங்கா முஸ்லிம் மக்கள் மீதான மியான்மிய பௌத்த இனவாதிகளது வன்முறைகளுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, 2012ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணைக்கால அரசவை அமர்வின் போது, ரொகிங்கா முஸ்லீம் மக்கள் மீதான மனித உரிமைமீறல்களை கண்டித்து தீர்மானமொனறினை நிறைவேற்றி இருந்தோம்.

அத்தீர்மானமானது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை சனநாயக வடிவமொன்றின் ஊடாக, உலகப்பரப்பில் நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஓர் வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விளங்குகின்றது.

இலங்கைத் தீவில் நீண்டகாலமாக சமூக-அரசியல் பொருளாதார பண்பாடடுத் தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களுக்கான ஒர் அரசாங்கமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, மியான்மார் மண்ணில் பௌத்த இனவாதிகளினால் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும், ரொகிங்கா முஸ்லீம் மக்களுக்கு, இத் தீர்மானமானது தனது தோழமையினை தெரிவித்துக்கொள்கின்றது.

மியான்மார் மண்ணின் குடிமக்களாகிய ரொகிங்கா மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகள்- கைதுகள் காணமால்போதல்கள் - பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ளும் ஒடுக்குமுறையாளர்களை, இந்த தீர்மானம் வன்மையாக கண்டிக்கின்றது.

திட்டமிட்ட வகையில் ரொஹிங்க முஸ்லிம்களின் வாழ்விடங்களை அழித்தும், அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்து மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்படுவது குறித்தும் இந்த தீர்மானம் கண்டித்துக் கொள்கின்றது.

மியான்மார் மண்ணில் ரொகிங்கா மக்களுக்கான குடியுரிமையினையும், அவர்களது சமூக பொருளாதார அரசியல் வாழ்வுரிமையினை உறுதிப்படுத்திமாறு சர்வதேச சமூகத்தினை இந்த தீர்மானத்தின் வழியே வேண்டி நிற்கின்றோம் எனத் அத்தீர்மானம் அமைந்திருந்தது.

மேலும் இது தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், தற்போது ரொகிங்கா மக்கள் மீது உச்சம் பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து அரசுகளை விட, உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கண்டனம் மிக முக்கியமானது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இக்குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றன.

தமிழினத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசு நடாத்திய இனப்படுகொலைக்கான பரிகாரநீதி கோரலுக்கான ஆதரவினை உலக மக்களிடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இது தருவதோடு, இதன்வழி உலக அரசுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியுமெனத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை உலக மக்களிடத்தில் நாம் கொண்டு செல்வதற்குரிய அனைத்து வழிமுறைகளையும் நாம் கையாள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக இதனை மேற்கொள்ள அனைத்து வலைஞர்களையும் இத்தால் வேண்டுகின்றேன் எனவும் அமைச்சர் மாணிக்கவாசகர் அழைப்பு விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments