புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியா சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் சமூக-அரசியற் செயற்பாட்டாளரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சருமாகியசுதன்ராஜ் அவர்களினால் வழங்கப்பட்ட கருத்துரையின் சுருக்க தொகுப்பு :
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் : நின்று நிதானித்து விழிப்புறவேண்டும் !
வட தமிழீழத்தின் புங்குடுதீவுப் பகுதியில் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் சம்பவம், ஊர்களை நாடுகளைக் கடந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரையும் கோபத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற புங்குடுதீவில், சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகாவின் ஆட்சியின் போது, 1990ம் ஆண்டுகளில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாரதாம்பாளின் சம்பவத்துக்கும், இன்று வித்தியாவின் சம்பவத்துக்கும் இடையிலான அக- புற காரணிகள் வெவ்வேறானதாக உள்ளது.
அன்று இப்பகுதியினை ஆக்கிரமித்து நின்ற சிறிலங்கா படைத்தரப்பே சாரதாம்பாளின் சம்பவத்துக்கான நேரடியான புறக்காரணியாக இருந்த நிலையில், தற்போது வித்தியா மீதான சம்பவத்துக்கு சமூகத்தில் இருந்து எழுந்த அக காரணிகளே பிரதானமாக அமைந்துள்ளன.
இதனை நாம் அரசியற் பிரச்சனையாக அணுகிவிடாது, சமூகப் பிரச்சனையாக அணுகவேண்டும்.
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள அரச கட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே, சமீபத்திய காலங்களில் யாழ்பாணத்தில் மேலெழுந்து வருகின்ற சமூகப் பிரச்சனைகளை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.
1995ம் ஆண்டு யாழ் இடப்பெயர்வும் அதனோடு யாழ்ப்பாணத்தினை ஆக்கிரமித்த சிறிலங்கா படைகளினது பிரச்சன்னத்துக்கு பின்னரான யாழ்ப்பாணத்தில், சமூகமட்டத்தில் எழுந்து வருகின்ற பல்வேறு விடயங்களை எழுந்தமானமாக அரசியற் சாயம் பூசியவாறு, சமூக மட்டத்தில் கூட்டுப்பொறுப்புடன் ஆழமாக விவாதிக்கவும் விழிக்கவும் தவறிவிட்டோம்.
ஓர் ஆக்கிரமிப்பு இராணுவம் தான் ஆக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்திடையே எத்தகைய விடயங்களை விதைக்கும் வளர்த்தெடுக்கும் ?
ஆக்கிரமப்பு இராணுவச்சூழலுக்குள் பிறந்து வளர்ந்து வருகின்ற இளம் சமூகத்தினரது சிந்தனை எத்தகையதாக இருக்கும் என்பதனை நாம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இனவிடுதலை தொடர்பிலான சிந்தனையோ, அதற்கான எத்தணிப்போ அவர்களது பொதுப்புத்தியில் எழாதிருக்க வைப்பது ஆக்கிரப்பு சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல்.
ஓர் இனத்தினை அதனது கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் தளத்தில் திட்டமிட்டவாறு சிதைப்பதும் இனவழிப்பின் ஒர் அங்கமே.
2009ம் ஆண்டு போரின் ஓய்வுக்கு பின்னராக, யாழ் நோக்கி வீறு கொண்ட சிறிலங்கா அரசின் அபிவிரித்தி அரசியல், இளந்தலைமுறையினரை நோக்கியதாகவே பெருதும் அமைந்திருந்தது. கைதொலைபேசி, இணையம், பற்பரிமாண தொலைக்காட்சிகள், மதுபானசாலைகள், பாலியல் திரைக்கூடங்கள், மசாச் கிளப்புகள், போதைப்பொருட்கள் என நன்கு திட்டமிட்ட வகையில் அபிவிரித்தி அரசியல் யாழை உழுது விதைத்தது.
சடுதியாக வந்து சேர்ந்த இவைகள், யாழ்ப்பாணத்தின் மரபுரீதியான சமூக கட்டமைப்பினை ஆட்டங்காண வைக்கத் தொடங்கி உள்ளதான அறுவடையின் உச்சமே வித்தியா மீதான கூட்டுவன்புணர்வு. வாள்வெட்டு, சாதிச்சண்டைகள், தொடர் தற்கொலைகள், குழு மோதல்கள் நீண்டு செல்லும் பட்டியல்.
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு அஞ்சலி செய்துவிட்டோ, கண்டித்துவிட்டோ சம்பிர்தாயபூர்வ சடங்காக கடந்துவிடமல், வித்தியாவினது சம்பவத்தின் ஊடாக இச்சமூகம் அதன் உட்கட்டமைப்பில் அதன் அகத்தில் எதிர் கொண்டுள்ள சிக்கல்கள் சவால்கள் குறித்து ஆழமாக நின்று நிதானித்து விழிப்புறவேண்டும்.
சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு இது.
ஆனால் இக்கூட்டுப் பொறுப்பில் இருந்து தவறி, அடிப்படை அறங்களை துறந்து, வித்தியாவின் சம்பவத்தினை இணைய ஊடகங்கள் சில கையாளுகின்ற விதம் வன்மையாக கண்டிக்தக்கது.
சமூகப் பொறுப்போ, பண்பாடோ, ஊடக அறமோ ஏதுமற்று, வெற்றுப் பரபரப்புக்காக வித்தியாவின் சம்பவத்தினை மையாக வைத்து இணையத்தளங்களில் இடுகின்ற செய்தித் தலைப்புக்களும், சமூக வலைத்தளங்களில் மேலெழுந்துவாரியாக இட்டுவிட்டு போகின்ற நுனிப்புல் மேய்தலுமான இந்த அருவருப்பான நடத்தை வன்மையான கண்டனத்துக்குரியது.
இதனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரது உளவியல்ரீதியான மன உளைச்சல் குறித்தான குறைந்தபட்ச மனித நேயமும் இந்த ஊடக வியாபாரிகளிடம் இல்லை.
சமூகத்தின் அக நிலையில் படிந்துள்ள அருவருப்பான இப்போக்கினை வன்புணர்வு உளவியலின் மற்றுமொரு வடிவமாக கருதிடமுடியும்.
இத்தகைய போக்கினை ஜீரணித்தவாறே, இராணுவ ஆக்கிரமிப்புக்கு சூழுகைக்குள் உள்ள தமிழ் மக்களினது சமூக மட்டத்திலான அக பிரச்சனைகள் குறித்து புலம்பெயர் தமிழ் சமூகமும் நின்று நிதானித்து விழிப்புற வேண்டும்.
No comments
Post a Comment