அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள மலாலா யூசுப்சாய் மூன்று ஆண்டுகளுக்கு முன் தலையில் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 8 பேர் ரகசியமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் கல்வி கற்பது இஸ்லாத்துக்கு முரணானது என்ற கடும்போக்கு சிந்தனையுடைய தாலிபான்கள், ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்த பெண்கள் பள்ளிக் கூடங்களுக்குத் தடை விதித்தனர். அதை எதிர்த்து பள்ளிக் கல்விக்காக போராடியதால் மலாலா தலையில் சுடப்பட்டார்.
மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகளால் உயிர் பிழைத்து தற்போது இங்கிலாந்தில் வாழும் மலாலா தொடர்ந்து பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு கொடுக்கப்பட்டது. அந்தப் பரிசை பெற்ற மிகவும் இளையவர் இவர்தான்.
இந்த அளவுக்கு சர்வதேச கவனத்தை மலாலா பெற்றும் அவரை சுட்டவர்கள் தொடர்பான வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்த குற்றச் சம்பவம் தொடர்பாக காவல்துறை 10 பேரை கைது செய்திருந்தனர். இவர்களுக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.
ஆனால் விசாரணைக்குப் பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் பிபிசிக்கு தற்போது வந்த தகவல்கள் உறுதிசெய்கின்றன.
எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக நடைபெறாத, இந்த விசாரணையின் நம்பகத்தன்மையை பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன.
முதலில், இந்த விசாரணை நிதிமன்றத்தில் அல்லாமல் ஒரு இராணுவ தளத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு பத்திரிக்கை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை எப்படி எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் இவ்வழக்கில் எவ்வகையில் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது குறித்த எத்தகைய விவரங்களும் பாக்கிஸ்தானிய அதிகாரிகளால் தெளிவாக விளக்கபடவில்லை.
தீர்ப்பு வெளியானவுடன் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட முதலில் ஒப்புக்கொண்ட இராணுவ செய்தித் தொடர்பாளர், பின்னர் அதிலிருந்து பின்வாங்கிவிட்டார்.
No comments
Post a Comment