Latest News

June 05, 2015

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது!
by Unknown - 0

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்துட்டு சபாநாயகரிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 112 பேர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையற்ற அரசைக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதுள்ள அதிருப்தி காரணமாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைக்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையில் கையெழுத்திட்டதன் பின்னர் அது உத்தியோகபூர்வமாக சபாநாகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை கையளிக்கும்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எங்களுடன் இருந்தனர்", என்று பிபிசியிடம் தெரிவித்தார் மனுச நாணயக்கார.

நம்பிக்கையில்லா தீர்மானம் எதற்காக?

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது எதற்கு என்கிற கேள்விக்கு பதிலளித்தபோது, "இலங்கை பிரஜாவுரிமையற்ற ஒருவரை இலங்கை மத்திய வங்கியின் தலைவராக அவர் நியமத்துள்ளார். இன்னொருபுறத்தில் மிகப்பெரிய நிதி மோசடி செய்து நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சீரழிந்து செல்ல வழிவகுத்துள்ளார். இதையனைத்தையும் அடிப்படையாகக்கொண்டே பிரதமருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

இருந்தபோதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரும் ஜனாதிபதிமான மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இவர்கள் இதை செய்திருப்பது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்படியொரு வேண்டுகோளை எங்களிடம் முன்வைக்கவில்லை. 

எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் உட்பட கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்திற்கு வந்தோம். இது ஜனாதிபதிக்கும் தெரிந்திருக்கும். எங்களுக்கு எமது ஜனாதிபதியுடன் எந்த பிரச்சினையும் இல்லை. பிரதமர் தான் இங்கு பிரச்சினைக்குரியவர்" என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார.

"நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத்தயார்"

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் நம்பிக்கை இல்லா பிரேரணையையும் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அதில் வெற்றி பெற்று தமது கட்சியின் பலத்தை எதிர்க்கட்சிக்கு உணர்த்துவோம்" என அவர் பிபிசியிடம் கூறினார்.
« PREV
NEXT »

No comments