Latest News

June 03, 2015

பிரதமர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் ஒப்பமிட சு.க அமைச்சர்கள் தயக்கம்
by Unknown - 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐ.ம.சு.மு. கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பலர் கையொப்பமிடமாட்டார்களெனத் தெரிய வருகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தான் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை எனவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் கைச்சாத்திடப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் பொருளாதார நெருக்கடி, நாட்டின் பாதுகாப்பு நிதி மோசடி விசாரணை பிரிவினூடாக அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதாக ஐ.ம.சு.மு. கூட்டுக்கட்சித் தலைவர்கள் சிலரும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் சிலரும் இருவாரங்களுக்கு முன்னர் அறிவித் திருந்தனர்.

பெரும்பான்மை எம்.பிக்களின் கையொப்பத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் இதுவரை சுமார் 80 பேர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டிருப்பதாக பந்துல குணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவிலோ ஐ.ம.சு.மு. நிறைவேற்றுக் குழுவிலோ தீர்மானிக்கப்படாத நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட முடியாது என சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுதந்திரக் கட்சி எம்.பிக்களை கையெழுத் திட வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நம்பிக் கையில்லாப் பிரேரணையை கைவிடுமாறு ஐ.ம.சு.மு. தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரியிருந்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் இதுவரை கையெழுத்திடவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறின. ஆனால் ஜனாதிபதியின் அறிவிப்பையும் மீறி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட எதிர்க்கட்சித் தலைவர் முன்வந்திருப்பதாக விமல் வீரவங்ச எம்.பி. தெரிவித்தார்.

இதன்படி ஏனைய சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் இதில் கைச்சாத்திடுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து வினவியதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

சுதந்திரக்கட்சி எடுத்த முடிவின் பிரகாரமே நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்றோம். அரசாங்கத்திலிருந்து கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட முடியாது. அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் முடிவு சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் எடுக்கப்பட்டதல்ல. ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் சிலவும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் சிலரும் இணைந்தே இதனை முன்னெடுத்து வருகின்றனர். 

எனவே, இதில் கையெழுத்திட முடியாது. யாரும் என்னிடம் கையெழுத்துப்பெற வரவு மில்லை. அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் நாம் எதிர்க்கட்சி பாராளுமன்ற குழு உறுப்பினராக இல்லை. நான் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது சில ஐ.ம.சு.மு. கூட்டக் கட்சி தலைவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் நான் அந்த கூட்டங்களில் பற்கேற்பதில்லை. அவர்களின் தீர்மானங்களையும் ஏற்க முடியாது என்றார்.
« PREV
NEXT »

No comments