Latest News

June 07, 2015

வடக்கில் தலைவிரித்தாடும் சமூகப்பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசியலமைப்பு அவசியம் -ஜெயக்குமார் அடிகளார்
by Unknown - 0

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது இயங்குநிலையிலுள்ள அனைத்து அமைப்புக்களும் அரசியல் தலையீடுகளுடன் உள்ளமையினால்  சுயத்தை இழந்து காணப்படுகின்றது. இதனாலேயே எங்கள் மத்தியில் பண்பாட்டு சீரழிவு என்பன வலுவாக அதிகரித்துள்ளது என சவேரியார் குருத்துவக் கல்லூரியின்சமூகவியல் விரிவுரையாளரும் அருட்தந்தையுமான ஜெயக்குமார் தெரிவித்தார்.    

வடக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,    

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மூன்று கட்டத்தில் உள்ளன.முதலாவதாக நீண்ட காலமாக இருந்து வரும் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினை , இரண்டாவது பிரச்சினையாக மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் மற்றும் கைதிகள் விடுதலை  ஆகியன அத்துடன் மூன்றாவதாக உள்ள பிரச்சினை எமது பண்பாடு சீரழிவு ஆகும்.    

இந்த 3 பிரச்சினைகளும்  தீரவேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு அவசியம். இதனால் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் அரசியல் அமைப்பில் மாற்றம் வரும் என்பது கேள்விக்குறிதான். எனினும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், கைதிகள்  விடுதலை மற்றும் பண்பாட்டு சீரழிவு என்பனவற்றுக்கு தமிழ் மக்கள்  மத்தியில் உள்ள அமைப்புக்கள் செயற்படுத்தமுடியும் ஆனால் அவை தற்போது அரசியல் தலையீடுகளுடன் செயற்பட்டு வருகின்றன.   இதனால் அமைப்புக்கள் சுயத்தை இழந்து நிற்கின்றன. இதன்காரங்களாலேயே எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் தீராது உள்ளது. இங்கு இயங்கிவரும் அனைத்து அமைப்புக்களும் அரசியல் தலையீடுகளில் இருந்து வெளியேற வேண்டும்.

எனவே நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து பலவீனமடைந்த கட்டமைப்பை வலுவாக்க வேண்டும். வித்தியாவின்  படுகொலையினை வன்மையாக கண்டிக்கும்  அதேநேரம் மேலும் பல வன்முறை சம்பவங்களும் பதிவாகிக் கொண்டே வருகின்றன. இதனால் இளம் பராயத்தவர்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாவதுடன் சட்டவிரோத செயல்களை செய்வதற்கும் ஒரு உந்துதலாக அமைகின்றது. இதனால் எதிர்காலத்திலும் பல பிரச்சினைகள் தோன்றவே செய்யும்.    

எனவே ஊடகங்கள் நல்ல அறிவூட்டல்களை இளம்பராயத்தவர்களுக்கு வழங்கி அவர்களை நேரிய வழியில் செல்வதற்கு வழிவகுக்க வேண்டும். மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கும்  இவ்வாறான செயற்பாட்டில் கணிசமான பங்கு உண்டு. வடக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்ற நிலையில் புலம்பெயர் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இங்கு வறுமையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டால் வறுமை நீங்கும்.

இதனால் பல சமூக விரோத பிரச்சினைகள் இல்லாது போகும்.அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு பாரிய பொறுப்பு உள்ளது. அவர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற நிதி மற்றும் வெளிநாடுகளின் ஊடாகவும் பணத்தைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு எமது மக்களுக்கு இருக்கும்  அனைத்தும் பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments