Latest News

June 08, 2015

வடக்கு,கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஸ்பிரயோகங்களும் மலிந்து காணப்படுகின்றன -மாவை
by Unknown - 0

வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். இது எங்கனம் சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையைக் கண்டித்தும் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இன்று  காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அவர் மேலும் தெரிவிக்கையில்,   சமூகசேவை உத்தியோகஸ்தர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சமூக முன்னேற்றதுக்காக, சமூக சீரழிவுகளுக்கு எதிராக உழைத்து நன்மதிப்பை பெற்ற உயர்ந்த அதிகாரியாக அவர் திகழ்ந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. இருப்பினும், கொலையுடன் தொடர்புடையவர்களைப் பொலிஸார் இன்னமும் கைதுசெய்யவில்லை. சமூக சேவை உத்தியோகஸ்தரின் கொலையுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்தால் மட்டுமே மக்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் கட்டுப்படுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments