Latest News

June 08, 2015

புலிகள் போதைப்பொருள் வியாபாரிகளல்ல -தெற்கு அதிகாரிகளுக்கு அடித்துக் கூறினார் வடக்கு முதல்வர்
by Unknown - 0

வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.    

வடக்கில் போதைப் பொருள் பாவனையினால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.    அதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார்.    அதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை இப்போது முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர்.

இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை மறுத்து பேசிய போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,    போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. 

இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது. தற்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கட்டுப்பாடற்ற வகையில் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   இதேவேளை, போதைப்பொருள் பாவனையினாலேயே வடக்கில் பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் , ஆசிரியர்கள்  , வடக்கு முதல்வர் மற்றும்  அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.   

இதனையடுத்து வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தையும் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே இன்றைய கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments