எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட 6 பேரைக் கொண்ட சுதந்திர கட்சி குழு முதற் தடவையாக இன்று கூடியது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததாக அந்த குழுவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது என இந்த கலந்துரையாடலின் போது உறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நேற்று முன்தினம் இந்த குழு ஜனாதிபதியை சந்தித்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் வேட்பாளர் பதவி, தேசிய பட்டியல் உறுப்பினரோ அல்லது வேட்பு மனுவோ வழங்கப்படாது என ஜனாதிபதி அறிவித்ததாக ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அமைச்சரின் இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது என அந்த குழுவின் உறுப்பினரான சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று காலை தெரிவித்திருந்தார்.
தம்மை ராஜித சேனாரத்ன சந்திக்கவில்லை என இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த குழு நியமிக்கப்பட்டதன் பின்னர், இன்றைய தினமே முதற் தடவையாக கூடியதாகவும் சுட்டிக்காட்;டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment