Latest News

June 19, 2015

கொத்துக்குண்டுகளில் சிதறிய பிஞ்சுகளின் குருதியில் கட்டடங்கள்-சி.வி
by Unknown - 0

கொத்துக்குண்டுகள்,எறிகணை வீச்சுக்களில் எமது பிஞ்சுகள் குலை, குலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் சிந்திய குருதியினால் சிகப்பேறிய மண்ணில் தான் இன்று கட்டடங்கள் கட்டித் திறக்கப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

கிளிநொச்சி, மலையாளபுரம் அன்மை சாரதா வித்தியாலயத்தில் 6.2 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை வியாழக்கிழமை(18) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, '1977ஆம் ஆண்டு மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மலையகப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மிகப்பெருமளவான மக்கள் கிளிநொச்சி, மலையாளபுரம் பாரதிபுரம், கிருஸ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர். இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனி அலகாக இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பப் பிரிவை வேறொரு இடத்தில் தனியாக இயங்கும் வகையிலேயே குறித்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் 120  பாடசாலைப்; பிள்ளைகள் கொத்துக்குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர். 200 பிள்ளைகள் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்தவர்களாகவுள்ளனர். 30 க்கு மேற்பட்ட சிறுவர்களின் நிலை என்னவென்று தெரியாது. 

கொத்துக்குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிள்ளைகள் குலை குலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களில் உடலில் சிந்திய இரத்தத்தினால் சிகப்பேறிய மண்ணில் தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட  ஆறு வகுப்பறைகள், அதிபர் அலுவலகம், கணிணி அறை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். பாடசாலை முதல்வர் நா.கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; ஆகியோர் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments