மத்திய அரசிற்கும் மாகாண அரசிற்கும் இடையில் இருக்கும் உறவுமுறை சந்தேகத்திற்கு இடமின்றி உணரப்படல் வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
ஒரே பாதணி எல்லோருக்கும் பொருந்தும் என்று எண்ணுவது மடமை. மாகாண சபைகளுக்குள்ளே வேற்றுமைகள் இருப்பதை நாங்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும். வடகிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பாரிய அழிவை எதிர்நோக்கிய மாகாணங்கள் அவை.
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலத்த பாதிப்புக்குள்ளாகியவர்கள் இம்மாகாண மக்கள். இதை கருத்தில் எடுக்க வேண்டும். இலங்கை - இந்திய உடன்பாட்டின் நிமிர்த்தம் தான் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைக்கு பிரத்தியேகமான ஒரு தீர்வைப் பெறுவதற்காகவே 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் அப்போதைய அரசாங்கம் அதனை எல்லா மாகாணங்களுக்கும் ஏற்புடைத்து ஆக்கியது.
எனவே இன்று நடக்கும் இந்தக் கருத்தரங்கத்தின் அடிப்படைகள் சம்பந்தமாக எங்களுக்குச் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றை நான் இங்கு குறிப்பிடுவதாக இல்லை. நடைமுறையின் போது ஒரே விடயம் இருமுறை செயற்படுத்தப்படல், ஆகக் கூடிய வகையிலே வளங்களைப் பாவிப்பது மற்றும் போதுமான நிதியங்களைப் பெறுவது போன்றவற்றை கலந்தாலோசிப்பதில் எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவுமுறை சந்தேகத்திற்கிடமின்றி நிர்ணயப்படுத்தப்படல் வேண்டும்.
மாகாணசபைகளின் தேவைகளை முன்வைத்து அதேநேரம் நாட்டினது தேவைகளையும் மனதில் எடுத்து கொள்கைகள். உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கும் போது கீழிருந்து மேல்நோக்கி எங்களுடைய திட்டமமைப்பு நடைபெறவேண்டும். இப்பொழுது மேலிருந்து கீழ் நோக்கி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதைத் தவிர்க்க வேண்டும். மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது.
இதைவிட குறித்த குழுவில் மற்றைய விடயங்கள் சம்பந்தமாக பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
உதாரணத்திற்கு மனிதவளம் சம்பந்தமாக போதிய ஆளணி இல்லாக் குறையை மத்திய அரசாங்கம் நிவர்த்திசெய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகளுக்கு உரிய நிதியம் போதுமானதாக வழங்கப்படவில்லை என்பது அவரால் குறிப்பிடப்பட்டது. நிதியமானது தாமதமாகி வருவதால் செயல்த்திட்டங்கள் நேரத்திற்கு முடிக்கமுடியாமை பற்றியும் அவரால் குறிப்பிடப்பட்டது.
தனியார் அரசாங்க பங்குபற்றலின் காரணமாக முதலீடு செய்வதை மாகாணங்கள் வரவேற்றாலும் அவற்றின் நன்மைகள் எந்தவிதத்தில் மாகாணங்களுக்கும் அவற்றின் கொள்கைகளுக்கும் ஏற்புடையதாக அமையும் என்பதையும் கவனத்திற்கு எடுக்கவேண்டும் என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்களின் அலுவலர்கள் சம்பந்தமாக போதிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போதிருக்கும் ஆளணி வெற்றிடங்கள் உடனேயே நிரப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு குழுவின் முதலமைச்சர்களும் தங்கள் தங்கள் குழுக்களால் கருத்திற்கெடுக்கப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் முன் முன்வைத்தார்கள்.
No comments
Post a Comment