Latest News

June 07, 2015

தாய் தந்தையரைக் கொலை செய்த 16 வயது சிறுமிக்கு பிணை
by admin - 0

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், நான்காவது சந்தேகநபரான, கொலை செய்யப்பட்டவர்களின் மகளான ரகு தக்ஷனா (வயது 17) எனும் பள்ளி மாணவிக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்க உத்தரவிட்டார்.


இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களான மாணவர்கள் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், நான்காவது சந்தேக நபரான ரகு தக்ஷனாவுக்கு, அவரது பாதுகாப்பு காரணமாக பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அப்பொழுது மறுப்புத் தெரிவித்ததுடன், பிணை கோரிய சந்தேக நபரான மாணவியின் அம்மம்மாவினால் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாதெனவும் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,

வழக்கின் நான்காவது சந்தேக நபரான ரகு தக்ஷனா கடந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களும் விளக்கமறியலில் இருந்து வருவதையும், வழக்கின் நிகழ்வுகளுக்கு நடவடிக்கைகளை எடுக்கும் சந்தர்ப்பங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடாது என்பன போன்ற விடயங்களையும் கவனத்திற் கொண்ட நீதிபதி நிபந்தனைகளுடனான பிணை வழங்க உத்தரவிட்டார்.

இதன்படி ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பாதுகாப்பு இல்லத்திலேயே தங்க வேண்டுமெனவும், மட்டு.ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் தனது கல்வியைத் தொடரலாமெனவும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நீண்ட காலம் விளக்கமறியலில் இருந்து வரும், இளம் பருவத்தினரான சந்தேக நபர் தாய், தந்தையை இழந்த நிலையிலுமிருப்பதால் அவரது உளநல விடயத்தில் அக்கறை கொள்வது அவசியமெனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழுள்ள உளவள ஆற்றுப்படுத்தல் நிலையம் மூலம் ஆறு வாரங்களுக்குப் பிறகு நன்னடத்தை உத்தியோகத்தர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7ம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவில், பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை தொடர்பாக செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


கொலை செய்யப்பட்டவர்களின் மகளான ரகு தக்ஷனா நான்காவது சந்தேக நபராக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments